மத்திய அரசால் இயற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அவர்கள் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்துவிட்டால், நகரத்திற்குள் நுழையப் பயன்படுத்தப்படும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் தடுத்து தலைநகரை ‘முடக்கி’ விடுவோம் என்று கூறியுள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8 முதல் வட இந்தியாவில் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக லாரி ஓட்டுநர் சங்கமும் தெரிவித்துள்ளது.
“எங்களால் சமரசம் செய்துகொள்ள முடியாது. மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று அரசுடன் நடந்த நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகக் கிரந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் எங்கள் ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக வழங்குகிறோம். தொடர்ச்சியாகக் கலந்துரையாடலிலும் பங்கேற்கிறோம். ஆனால் எங்கள் கோரிக்கை நிறைவேறாதவரை, இங்கேயும் நாட்டின் பிற பகுதிகளிலும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். டெல்லியின் மற்ற எல்லைகளும் தடுக்கப்படும். அதனால், தலைநகர் மேலும் திணறும்” என்று அவர் சிங்கு எல்லையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கை அரசின் சட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதால் பல பகுதிகளாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் சிக்கிக்கொள்ள விருப்பம் இல்லை என்று விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் நிலைப்பாடு
சட்டங்களில் சிறிய மாற்றங்களைக் கொண்டுவருவதைப் பரிசீலிக்க மட்டுமே மத்திய அரசு தயாராக உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கவோ அல்லது அதைச் சட்டத்தில் இயற்றவோ அரசு தயாராக இல்லை என்று பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கூறுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. வேளாண் உற்பத்தி சந்தைக் குழு கட்டமைப்பிற்குள் போதுமான பாதுகாப்பை உறுதி செய்வதைக் கருத்தில்கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் நெடுஞ்சாலைகளை மறித்த பாரதிய விவசாயிகள் யூனியன்-டிக்கைட் குழுவினர், நேற்று தனியாக அமைச்சரவைச் சந்திப்பில் கலந்துகொண்டனர். தற்போது, அவர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
“பல்வேறு குழுக்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் இயக்கத்தைப் பிரிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இது இனி பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல. நாங்கள் ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா’ எனும் பதாகையின் கீழ் கூட்டாகப் போராடும் ஒரு தேசிய இயக்கம்” என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.
விவசாயிகளை அழித்துக் கார்ப்பரேட்டுகள் பயனடையும் என்று கூறப்படுவதால், தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி மற்றும் பிரதமரின் உருவ பொம்மைகளை எரிக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று இச்செய்தி கூறியுள்ளது. எனவே, டிசம்பர் 5-ம் தேதி ஒவ்வொரு கிராமத்திலும் இவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்படும்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.