Aran Sei

இந்துத்துவம்தான் நம் நாட்டின் சுயராஜ்ஜியம் – மோகன் பாகவத்

இந்துத்துவம்தான் நம் நாட்டின் சுயராஜ்ஜியம் என்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குறிப்பிட்ட எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல. முஸ்லிம் சகோதரர்களைச் சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் இன்று தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஆண்டுதோறும் நடக்கும் விஜயதசமி பேரணி இன்று நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றுப் பேசினார்.

“ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) இந்து ராஜ்ஜியம் என்று கூறும்போது, எங்கள் மனதில் அது அரசியல் அல்லது அதிகாரத்தை மையமாகக்கொண்ட கருத்தாக அது வெளிவரவில்லை. இந்த ராஜ்ஜியத்தின் ‘சுயம்’ என்பது இந்துத்துவம் என்கிறோம். நாட்டின் சுயத்தை இந்து என்று தெளிவாக ஒப்புக்கொள்கிறோம்.” என்று கூறினார்.

இந்து கலாச்சாரம் தன்னகத்தே பல பன்முகத்தன்மைகளைக் கொண்டுள்ளது என்று கூறும் அவர், “ஆனால், சில குழுக்கள் மக்களிடையே பாதுகாப்பின்மையை உருவாக்கி, அவர்களிடையே வெறுப்பைப் பரப்புகிறார்கள். ஒருவர் இந்து என்று தன்னை ஒத்துக்கொண்டாலே, அவர் பன்முகத்தன்மைக்கு எதிரானவராகச் சித்தரிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்துத்துவம் என்ற சொல் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த வார்த்தை சுய அடையாளத்தையும் ஆன்மீகம் சார்ந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும் நாட்டின் முழுச் செல்வமான நம் பெருமைகளையும் வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறார்.

“ஆரோக்கியமான அரசியல் போட்டி என்பது எப்போதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் வெறுப்பையும் கசப்பையும் பகைமையையும் உருவாக்கும் அரசியல் போட்டிகள் சமூக ஒற்றுமையைப் பலவீனப்படுத்துகிறது. நம் சமூக-கலாச்சார விழுமியங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களும் அல்லது அவற்றை எதிர்ப்பவர்களும் இந்த ஜனநாயகத்தும் மதச்சார்பின்மைக்கும் தாங்கள் ராஜாக்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். மேலும் தொடர்ந்து இவர்கள் மக்களை முட்டாள்களாக்கிக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று தங்களுடைய எதிர்த் தரப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

”சுயராஜ்ஜியத்தில் உள்ள ‘சுய’ என்ற வார்த்தை இந்துத்துவத்தைக் குறிக்கிறது. அந்த ஆன்மா அல்லது ‘சுயம்’ என்பது நமது அறிவார்ந்த செயல் திட்டங்களை நமக்குக் காட்டி, அதைச் செய்வதற்கான திசைகாட்டியாகவும் இருந்து நம்மை வழிநடத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்துப் பேசிய போது, இந்தச் சட்டம் குறிப்பிட்ட எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை என்கிறார். “ஆனால் இந்தப் புதிய சட்டத்தை எதிர்க்க விரும்புகிறவர்கள், முஸ்லிம் மக்கள் தொகையைக் குறைப்பதற்கான சட்டம் இது என்ற பொய்யான கருத்தைப் பரப்புவதன் மூலமாக நமது முஸ்லிம் சகோதரர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்” என்று அவர் கூறினார். குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பைப் பயன்படுத்தி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாகக் கூறினார்.

சீனாவுடனான நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த போது, இந்தியப் பாதுகாப்புப் படைகளும், அரசாங்கமும், நம் மக்களும் இணைந்து, நமது நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்த சீனாவின் முயற்சிகளுக்குச் சரியான பதிலடி கொடுத்ததாகக் கூறினார். “சீனாவை விட பொருளாதார ரீதியாகவும் திறன் ரீதியாகவும் வளர்வதன் மூலமும், நமது அண்டை நாடுகளுடன் கூட்டுறவு உறவுகளைப் பாதுகாப்பது மூலமும் சீனாவின் விரிவாக்க ஆசைகளை நாம் அழிக்க முடியும்.” என்று அவர் கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்