Aran Sei

இந்தி பேசுபவர்கள்தான் இந்தியர்களா? 

 

‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் தமிழ் இணையச் சூழலில் மிகப்பெரும் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதற்காக அங்கிருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலரால் ‘நீங்கள் இந்தியரா?” என்கிற கேள்விக்குள்ளாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ‘stop hindi imposition’ என்கிற ஹாஷ்டேக் பிரபலமானது.

இந்தி தெரியாது என்று சொன்னதற்காக விமான நிலையத்தில் தான் அவமதிக்கப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் விகடனுக்கு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். செப்டம்பர் 4ம் தேதி அவரது பிறந்த நாளன்று திடீரென அப்பேட்டியின் குறிப்பிட்ட அப்பகுதி மட்டும் வைரலானது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் இந்தி தெரியாததால் அவமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக ‘ஹிந்தி தெரியாது போடா’ என்கிற வாசகங்களைத் தாங்கிய டி சர்டுகளை அணிந்து திரைப் பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட, சமூக வலைத்தளங்களில் #ஹிந்தி_தெரியாது_போடா என்கிற ஹாஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது.

நடிகர் ‘மெட்ரோ’ சிரிஷ் ‘hindi theriyathu poda’ என்று அச்சிடப்பட்ட டி சர்ட்டையும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘I am a தமிழ் பேசும் Indian’ என்று அச்சிடப்பட்ட டி சர்ட்டையும் அணிந்தபடி வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் எண்ணிக்கையில் பகிரப்பட்டு ட்ரெண்டானது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி கிகி விஜய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரும் அந்த டி சர்ட்டை அணிந்தபடி புகைப்படங்கள் வெளியிட்டனர்.

 

இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிரான வாசகங்கள் பதிக்கப்பட்ட டி சர்ட்டுகளை அணிந்த இளைஞர்களுடன் கனிமொழி சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தித் திணிப்புக்கு எதிராக வெளியிடப்பட்ட டி சர்ட்டுகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்றும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘இந்தி தெரியாது போடா’ என்கிற ஹாஷ்டேக்கில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் பகிரப்பட்டு தமிழக ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இக்கருத்துகளுக்கு எதிர்த்தரப்பாளர்கள் ‘இந்தி பேசுவேன் போடா’ ‘இந்தி கற்றுக்கொள்ளும் தமிழன்’ என்பது போன்ற வாசகங்களை அச்சிட்ட டி சர்ட்டுகளை அணிந்தும், அதையே ஹாஸ்டேகாகவும் வைத்து பதிவிட்டனர். திரெளபதி பட இயக்குனர் மோகன்  ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கற்க வாய்ப்பு தராதது ஏன்? என்று ட்வீட் செய்திருக்கிறார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்