Aran Sei

‘உன் மகளா இருந்தா நள்ளிரவில் எரித்திருப்பாயா?’: உயர்நீதி மன்றம்

Credits DNA India

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த பெண்ணின் உடலைக் காவலர்கள் நள்ளிரவில் எரித்தது மனித உரிமை மீறல் என உத்தரப்பிரதேச அரசினை உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் செப்டம்பர் 14-ம் தேதியன்று பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நான்கு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு காயம்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

செப்டம்பர் 29-ம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அந்தப் பெண் உயிர் இழந்தார். பெண்ணின் இறந்த உடலை பெற்றோர் அனுமதியின்றி உத்தரப்பிரதேசக் காவலர்கள் நடு இரவில் எரியூட்டியுள்ளார்கள்.

அலகாபாத் உயர்நீதி மன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ராஜன் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கினைக் கையாள்கிறது.

அக்டோபர் 12-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். பெண்ணின் அப்பா, அம்மா உள்ளிட்ட குடும்பத்தினர் ஐந்து பேர் நீதி மன்றத்தில் அவர்கள் தரப்பைப் பதிவு செய்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்கு முன் மட்டுமே மகளின் உடலைப் பார்த்ததாக பெண்ணின் அப்பா கூறியுள்ளார். அதன்பிறகு உடல் அவரிடம் ஒப்படைக்கப்படாமல் அவசர ஊர்தியில் சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது என அவர் கூறியதாக நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கை மறுநாள் காலை நடத்தலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்தபோதும், அதிகாரிகள் நள்ளிரவே மகளின் உடலை எரித்ததைக் கூறி மகளுக்கு நீதி வேண்டும் என்று பெண்ணின் அப்பா நீதிமன்றத்தில் மன்றாடியதாகவும் உத்தரவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகளின் முகத்தைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று அழுது புலம்பிய பெண்ணின் அம்மாவும், அவர்களின் விருப்பத்துக்கு எதிராக இரவோடு இரவாக உடல் எரிக்கப்பட்டதெனக் கூறியுள்ளார் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெண்ணின் உடல் அவசர ஊர்தியில் கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்படாமல், ஒரு மணிநேரம் வரை அருகில் இருந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து எரிப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டதெனப் பெண்ணின் சகோதரர்கள் கூறியுள்ளார்கள்.

உடலை எரித்தபோது குடும்பத்தினர் யாரும் அங்கு இல்லை என்றும் பெண்ணின் அப்பா மற்றும் சகோதரர்கள் கூறியுள்ளார்கள்.

இறந்த பெண்ணுடைய சகோதரரின் மனைவி, அதிகாரிகள் அவர்களை ஏமாற்றியதாகவும் உடலை எரிக்க எடுத்துச் சென்றபோது அந்த வாகனத்தைத் தடுக்க முயன்ற உறவினர்களிடம் முறைதவறி நடந்துகொண்டார்கள் எனவும் மிகவும் கோபமாகப் பேசியதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

எந்த இழப்பீடும் வேண்டாம், இறந்த உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் நடு இரவில் எரியூட்டிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அவர் தரப்பைக் கூறிய மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஸார், செப்டம்பர் 30-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருந்ததால் காவல் அதிகாரிகளுடன் கூடிப்பேசி நள்ளிரவே உடலை எரியூட்ட முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

மறுநாள் வரை தாமதப்படுத்தி இருந்தால் 10,000 பேர் கூடி சம்பவத்தைச் சாதி மற்றும் அரசியல் ரீதியான பிரச்சனையாக மாற்றிவிடக் கூடும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காணொலிகளில் மண்ணெண்ணெய் கேன் இருப்பதுபோல தெரிந்தாலும் அதில் கங்கை நதி தீர்த்தம்தான் நிரப்பப்பட்டிருந்தது எனவும் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

”பாதிக்கப்பட்டவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் இறந்த உடலை எரித்திருப்பீர்களா?” என்று நீதிபதிகள் அமர்வு மாவட்ட நீதிபதியிடம் கேள்வி எழுப்பியதாக தி வயர் இணயதளம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி கூறியதையே வழிமொழிந்த காவல்துறை துணை இயக்குநர் ஸ்ரீ குமாரிடம் நீதிபதிகள், “உங்களுடைய மகளா இருந்திருந்தால் இதேபோல நள்ளிரவில் இறுதிச்சடங்கு நடத்த அனுமதித்திருப்பீர்களா?” என்று கேட்டதாக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

”பாலியல் வன்கொடுமை குறித்து சட்டம் கூறும் விளக்கம் என்ன என்பதும், தடயவியல் ஆய்வில் விந்தணு இல்லை என்று தெரிவித்தால் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது என்பதும் உங்களுக்கு தெரியுமா?” என்றும் ஸ்ரீ குமாரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இந்த மாதம் ஸ்ரீ குமார் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில், “தடயவியல் ஆய்வறிக்கையில் விந்தணுக்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையில் தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக இறந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.” என்று கூறியிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினாலும் கூட, மாநில நிர்வாகிகளின் இந்த நடவடிக்கை இறந்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் மனித உரிமையினை மீறும் செயல் என அலகாபாத் உயர்நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தும் பெண்ணின் உடலைப் பார்க்கக் கூட அவர்களை மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பது பெண்ணின், குடும்பத்தினரின் உரிமைகளை மீறியதோடு அவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடைய பாதுகாப்பினை உறுதி செய்து, அவர்களுக்கு எந்த ஆபத்தும் நிகழாதபடி யோகி ஆதித்யநாத் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரப்பிரதேச அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு மற்றும் சிபிஐ நடத்தும் விசாரணைகள், அது தொடர்பான ஆவணங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்