Aran Sei

அரசு கருவூலத்திற்கு ரூ.25,000 கோடி இழப்பு – சிபிஐ விசாரணை

Image Credits: Cross Town News

நேற்று, ரோஷ்னி நிலத் திட்டத்தில் நடந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று ‘இந்துஸ்தான் டைம்ஸில்’ செய்தி வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டபடி, குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால், அரசு நிலங்களின் உரிமையை அங்கு குடியிருக்கும் மக்களுக்கே வழங்க ரோஷ்னி சட்டம் திட்டமிட்டது. இந்தச் சட்டம் ஜம்மு-காஷ்மீர்-ன் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவின் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இது 1990-ம் ஆண்டை அரசு நிலங்களின் ஆக்கிரமிப்பை முழுமையாகத் தடுக்கும் ஆண்டாக அமைந்தது என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிடுகிறது.

ஏற்கனவே குடியிருப்பவர்களுக்கு, அரசு நிலங்களை, சந்தை விலைக்கு விற்பதின் மூலம் ரூ.25,000 கோடி பெறுவது அரசின் திட்டமாக இருந்தது. ஈட்டப்பட்ட வருவாய் நீர் மின் திட்டங்களை இயக்குவதற்குச் செலவிடப்படும் என்று அரசு கூறியது. எனவே இதற்கு “ரோஷ்னி” (வெளிச்சம்) என்று பெயர் சூட்டப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 2018-ம் ஆண்டு ரோஷ்னி திட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் ஜே & கே மாநில நிலங்கள் (ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிமையை வழங்குதல்) சட்டம் 2001-ஐ ரத்து செய்தது.

இந்தத் திட்டத்தில் முறைகேடுகள்குறித்து சிபிஐ விசாரணைக்குத் தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்தி எட்டு வாரங்களுக்கு ஒருமுறை அது குறித்த சூழ்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இக்ஜட் ஜம்மு அமைப்பைச் சேர்ந்த மனுதாரர் அங்கூர் ஷர்மா, இந்த மோசடியில் அரசு கருவூலத்திற்கு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

2018-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 8 வயது பேகர்வால் சிறுமியைக் கூட்டுப் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் அமைத்து பேரணி சென்றதில் முக்கியப் பங்கு வகித்த அங்கூர் சர்மா, 2014-ம் ஆண்டு இந்த நிலமோசடி வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நகரங்களில் அதிக மதிப்புள்ள பிரதான நிலங்களை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஊழலில் ஈடுபட்ட வழக்கை விசாரிக்க ஊழல் தடுப்புப் பணியகத்துக்கும் (The Anti Corruption Bureau) உத்தரவிட்டுள்ளது என்று ‘தி இந்து’ இணையத்தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இதுவரை இந்த வழக்கை விசாரித்து வந்த ஜம்மு ஊழல் தடுப்புப் பணியகம் (விஜிலென்ஸ்) 17 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்