Aran Sei

பாஜகவின் வேட்பாளர் பட்டியல் – ஒப்புதலின்றி பெயர் சேர்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் காங்கிரஸ் தலைவரின் மனைவி

image credit : indiatoday.in

கொல்கத்தாவின் சௌரிங்கி சட்டப் பேரவை தொகுதியில் வங்கதேச காங்கிரசின் முன்னாள் தலைவர் சோமன் மித்ராவின் துணைவியர் ஷிக்கா மித்ராவை வேட்பாளராக பாஜக அறிவித்தது.பின்னர், பாஜகவில் சேரும்படி சுவேந்து அதிகாரி கேட்டதற்கு அவர் மறுத்து விட்டதாகவும், இருந்தும் அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு பாஜகவை சாடியுள்ளார்.

நந்திகிராம் பகுதியைச் சேர்ந்த சுவந்து அதிகாரி திரிணாமூல் கட்சியின் மூத்த அமைச்சராக இருந்தவர். அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

ஷிக்கா மித்ரா மட்டுமின்றி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் மாலா சாகாவின் துணைவர் தருண் சாகாவ்சியை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதை ஏற்க மறுத்த அவர், தான் திரிணாமூல் காங்கிரசில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் சட்டப் பேரவை தேர்தலின் கடைசி கட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த பாஜக, கொல்கத்தாவின் சௌரிங்கி தொகுதிக்கு ஷிக்கா மித்ராவின் பெயரை அறிவித்திருந்தது என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

ஷிக்கா மித்ராவின்பெயர் வேட்பாளராக வெளியிடப்பட்டதும், கட்சியில் சேரும்படி பாஜக அவருக்கு அழைப்பு விடுத்தது.  அழைப்பை மறுத்த அவர், தன்னை வேட்பாளராக அறிவித்த  பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

‘தலைகீழாக தொங்கவிட்டாலும் எம்மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்’ – பாஜக சார்பாக போட்டியிட மறுத்த பேராசிரியர்

“என்னை ஒரு பாஜக வேட்பாளராக அறிவித்திருப்பது பற்றி ஊடகங்களில் இருந்து தெரிந்து கொண்டேன். எங்களிலிருந்து அவர்கள் முற்றிலும் வேறான கட்சி. நான் எப்படி பாஜகவில் சேர முடியும்” என்று கேள்வி எழுப்பிய ஷிக்கா மித்ரா, பாஜக கட்சித் தலைவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றும் கூறியுள்ளார்.

 

294 உறுப்பினர்கள் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தல், வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2011 சட்டப் பேரவை தேர்தலில் 35 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த இடது சாரி கூட்டணியைத் தோற்கடித்து மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 2016-ல் நடந்த தேர்தலிலும் 211 தொகுதிகளில் வென்ற திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது.

கூட்டணி அமைத்துபோட்டியிட்ட காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் இடதுசாரி கட்சியினர் 33 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக, கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன.

ஆனால், 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது, அதன் வாக்கு சதவீதம் சுமார் 10%-லிருந்து கணிசமாக அதிகரித்து 40%-ஐ எட்டியது. திரிணாமூல் காங்கிரஸ் 22 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் உட்பட பல அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜகவின் தலைவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்