Aran Sei

ஹத்ராஸ் சம்பவம்: அதிகாலை 3 மணிக்கு நடந்த தகனம்

Image Credits: India TV News

த்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் 15 நாட்களுக்கு முன்பு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்தப் பெண்ணின் உடலை, உத்தர பிரதேச காவல்துறையினர் நள்ளிரவில் கட்டாயப்படுத்தி, இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் சென்றதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

“எனது சகோதரியின் சடலத்தை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளனர், உடல் தகனம் செய்வதற்காக எனது தந்தையையும் அவர்கள் அழைத்துச் சென்றனர். எனது தந்தை ஹத்ராஸை வந்தடைந்ததும், அவரை உடனடியாக (தகனத்திற்கு) காவல்துறையினர் அழைத்துச் சென்றனர், ”என்று அந்தப் பெண்ணின் சகோதரர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்குக் கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் உடல் நள்ளிரவில் அவரது கிராமத்தை வந்தடைந்துள்ளது, இன்று அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கிராமத்தினர் அந்தப் பெண்ணின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினர், ஆனால் அரசு நிர்வாகம் விரைவில் தகனம் செய்ய அழுத்தம் கொடுத்துள்ளது. ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதை தடைசெய்யப்பட்டு இறுதியில் கிராமத்தில் தகனம் நடைபெற்றது என்று ஹந்துஸ்தான் டைம்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பெண்ணின் தகனம் குடும்ப உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) விக்ராந்த் வீர் தகனம் செய்வதற்காக காவல்துறையினர் ‘கட்டாயப்படுத்தவில்லை’ என்று கூறியிருக்கிறார், ஆனால் தகனம் பொதுவாக இரவில் நடக்காது என்றும் கூறியுள்ளார்.

உடல் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள பூல்கரி கிராமத்தை அடைந்த பின்னர் வழக்கம் போல் தகனம் செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். கிராமத்தில் சூழ்நிலை அமைதியாக இருப்பினும் அங்கு காவல் படைகளை இறக்கியுள்ளதாக விக்ராந்த் கூறியுள்ளார்.

இந்தப் பெண் செப்டம்பர் 14-ம் தேதி நால்வர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 15 நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளார். இவர் முதலில் அலிகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உயிரிழப்பதற்கு முன் அவர் இக்கட்டான நிலையில் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு உயிருக்கு போராடி வந்தார்.

நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்கள், பாலிவுட் நடிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இப்பெண்ணுக்கு எதிரான மிருகத்தனத்தை கண்டித்து அவருக்கு நீதி கோரி வருகின்றனர்.

2012-ம் ஆண்டு, ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த 23 வயது டெல்லி மனைவியின் வழக்குக்கு நிகரான வழக்கு இது என்று ஹந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.

“ஹத்ராஸில் கொடூர செயல் நடத்தையால் பாதிக்கப்பட்ட தலித் பெண் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் காலமானார். இரண்டு வாரங்களாக, அவர் மருத்துவமனைகளில் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தார்,” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹத்ராஸ், ஷாஜகான்பூர் மற்றும் கோரக்பூரில் நடந்த வன்கொடுமை சம்பவங்கள் மாநிலத்தையே உலுக்கியுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளிகளை விரைவாக விசாரித்துத் தூக்கிலிட வேண்டும் என்று கோரினார். “ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவரின் மரணம் முழு சமூகத்திற்கும், நாட்டிற்கும், அனைத்து அரசாங்கங்களுக்கும் வெட்கக்கேடானது. பல மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது, நம்மால் நமது குழந்தைகளை பாதுகாக்க முடியவில்லை” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், “ஹத்ராஸ் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் பேசினார், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்,” என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்