Aran Sei

அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – காரணம் தேசத்தின் கள்ள மௌனமா?

உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில், ஆதிக்க சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் போராடி உயிரிழந்த 19 வயதான பட்டியல்சாதி சிறுமியின் மரணம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை ‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கும் கவன ஈர்ப்பு சம்பவமாக’ மாற்றிவிடக் கூடாது, என்பதில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. மாநில பாஜக அரசு உறுதியாக இருப்பதையே, வன்கொடுமைக்குப் பிறகான அவர்களின் நடவடிக்கைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அதில் ஒன்றுதான் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் சகோதரருக்கும், ‘இந்தியா டுடே’ ஊடக நிருபரான தனுஸ்ரீ பாண்டே அவர்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடலைச் சட்டவிரோதமாக அம்மாநில அரசு ஒட்டுக்கேட்டிருப்பதும், அதனைக் காவல்துறையினரே சமூக ஊடகங்களில் கசிய விட்டுருப்பதும், பாஜகவினர் அதைப் பரப்பிவருவதும்.

இதை நியாயப்படுத்தும் வகையில், ‘இந்தியா டுடே’ விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற உ.பி. மாநில பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் ‘அமித் மாள்வியா’ பேசுகையில் “தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதென்பது ஏற்றுக்கொள்ளத் தக்க வழக்கமான நடைமுறைதான் எனவும், இதனை இவ்வளவு பெரிது படுத்தி சீற்றம் கொள்ளவேண்டிய அவசியமில்லை” என்று சர்வசாதாரணமாகக் கடந்துசெல்லும் தொனியில் பேசியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘இந்தியா டுடே’ நடத்திய கருத்துக்கணிப்பில் ‘யோகி ஆதித்யநாத் அவர்களை இந்திய மாநிலங்களிலே சிறந்த முதல்வராக’ நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்திருந்த நிலையில், இச்சம்பவத்திற்கு எதிர்வினை ஆற்றியுள்ள ‘இந்தியா டுடே குழுமம்’ அதிகாரப்பூர்வமாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சட்டத்தின் எந்தப் பிரிவுகளின் கீழ் இந்தத் தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றும், ஏன் ஹாத்ராஸ் கொலை சம்பந்தமான செய்தியைச் சேகரிக்கும் தங்கள் செய்தியாளரின் தொலைபேசியோ அல்லது துக்கத்திலிருந்து மீண்டுவந்துகொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினரின் தொலைபேசியோ ஒட்டுக்கேட்கப் பட்டிருக்கின்றன? மற்றும் ஏன் அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்? என்றும் கேள்வியெழுப்பி இந்நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர்”.

ஹாத்ராஸ் கோர சம்பவத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சித்த, இந்தியா டுடே ஊடகத்தின் செய்தியாளரான ‘தனுஸ்ரீ பாண்டே’ என்ற பெண் செய்தியாளரின் பங்கு அளப்பரியது.

கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த அந்தச் சிறுமியின் உடலைக் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம்கூட உரிய தகவல் தெரிவிக்காமல், அவர்கள் ஒப்புதலின்றி அவசர அவசரமாக நள்ளிரவில் எரியூட்டப்பட்டதை அந்த இடத்திற்கே சென்று காட்சிப்படுத்தியும், அங்கிருந்த காவல் அதிகாரியிடம் துளியும் அச்சமின்றி சரமாரியான கேள்விகளைக் கேட்டும், கடைசியாக ஒருமுறையேனும் தங்கள் பெண்ணின் முகத்தைப் பார்க்க மன்றாடிய அச்சிறுமி குடும்பத்தினரின் கதறல்களையும், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத வகையில் அடைத்துவைக்கப்பட்டு இருப்பதையும் துணிச்சலாகப் பதிவுசெய்தவர்.

அதோடு நின்றுவிடாமல், அதற்கு அடுத்த நாளிலும், எரியூட்டப்பட்ட இடத்திற்கு மீண்டும் சென்று, அந்தச் சிறுமிக்கும் அவர் குடும்பத்திற்கும் நடந்த அநீதியை நினைவூட்டும் வகையில் செய்தியைப் பதிவுசெய்தார்.

இந்நிலையில்தான் அச்சிறுமியின் குடும்பத்தினர் கடும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, மிகுந்த அச்சத்திற்கும் அச்சுறுத்தலிற்கும் உள்ளாகி இருப்பதாகவும்; சாதிய பாகுபாடு மற்றும் வன்முறை என்பது தினந்தோறும் அவர்கள் அனுபவிக்கும் ஒன்றுதான் என்றாலும், இச்சம்பவத்திற்கு பிறகு இனிமேல் அவர்களால் பாதுகாப்பாக அங்கே இருக்க முடியாது என்கிற வகையில் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் சகோதரரைத் தொடர்புகொண்டு பேசிய தனுஶ்ரீ பாண்டே, “நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதைப் பற்றித் தைரியமாக நீங்களும் உங்கள் தந்தையும் பேசி ஒரு காணொளியை எடுத்து அனுப்பும்படி” கேட்டுள்ளார். அந்த உரையாடலைத்தான் சட்டவிரோதமாகச் சமூக ஊடகங்களில் பாஜக ஐ.டி பிரிவினர் கசியவிட்டுப் பரப்பிவருகின்றனர்.

இச்சம்பவத்தைப் பொருத்தமட்டில் உ.பி மாநில அரசாங்கம், ‘சிறப்பு விசாரணை குழுவொன்றை’ நியமித்துக் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் கைதுசெய்தும், காவல்துறையைச் சேர்ந்த மூவரை பணிஇடைநீக்கம் செய்தும் முறையாக நடவடிக்கை எடுத்துவருவதாகப் பெயரளவில் தெரிவிக்கப்பட்டாலும், சட்டத்திற்குப் புறம்பான இச்செயல்களைச் செய்துவருவதன் மூலம், இக்கொடூர நிகழ்வில் முழுமையான உண்மையை வெளிவரவிடாமல் மூடிமறைத்து, குற்றவாளிகளைச் சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காகக் காக்க அம்மாநில அரசும் காவல்துறையும் முயல்கின்றனவோ என்ற பெரும் அச்சம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

அதற்கு வலுசேர்க்கும் விதமாகவே இத்தொலைபேசி ஒட்டுக்கேட்பு நிகழ்வு மட்டுமல்லாது, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது முதல், அவர்களின் பல்வேறு மோசமான அணுகுமுறைகள் அணிதிரண்டு நிற்கின்றன.

  • முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை உடனடியாக எடுத்துக்கொள்ளாதது.
  • குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் காலங்கடந்து கைதுசெய்தது.
  • உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காதது; தேவைகருதி நிர்பயாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்பியதுபோல், இச்சிறுமிக்கு அவ்வாறு செய்யாதது.
  • இறந்த அன்றே குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக, கடைசியாக ஒருமுறையேனும் அவர்களைச் சிறுமியின் முகத்தைப் பார்க்க அனுமதிக்காது. இரவோடு இரவாக இறுதி மரியாதையைக்கூட கண்ணியமாக நடத்தாமல் அவசர அவசரமாக எரியூட்டியது.
  • பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெளிவாகத் தெரிவித்த சிறுமியின் மரண வாக்குமூலத்தை இழிவுப்படுத்தி, அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் விந்தணுக்கள் இல்லை; ஆகவே அவர் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகவில்லையெனக் காவல்துறை தரப்பில் மறுத்தது.

குடும்பத்தை வீட்டுக் காவலில் அடைத்துவைத்து, கொரோனா பாதிப்பில்லாத கிராமத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து 144 தடை உத்தரவு போட்டு, எல்லைகளைச் சீல் வைத்துக் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

  • செய்தியாளர்கள் அரசியல் தலைவர்கள் என யாரையும் ஊருக்குள் அனுமதிக்காது தடைசெய்து, மீறிச் செல்பவர்கள்மீதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் அங்குப் போராட்டம் நடத்துபவர்கள்மீது வன்முறையைப் பிரயோகித்தது.
  • அதேசமயம் சிறுமி பாதிக்கப்பட்டது முதல் தற்போதுவரை தொடர்ந்து ஆதிக்க சாதியினரால் அக்குடும்பத்தினரின் உயிருக்கு மிரட்டல் வந்தபோதிலும் (அதற்கு முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியில் பட்டியல் சாதியினருக்கெதிராக ஆதிக்க சாதியினர் தொடர்ந்து வன்முறையைக் கையாண்டு வருகின்றனர்) விசாரணை நடைப்பெற்றுக்கொண்டிருக்கும்போதே, அக்கிராமத்தைச் சுற்றிய ஆதிக்க சாதியினர் கொடூரமான கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் கூடுவதற்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரையும் அவர் சார்ந்த சாதியினரையும் அச்சறுத்தும் விதத்தில் கோசங்கள் எழுப்புவதற்கும் அனுமதித்தது.
  • இது எல்லாவற்றையும்விட உச்சமாக, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர், வழக்கை விசாரித்த காவலர்கள் மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட குடும்பதினருக்கும் ‘உண்மை கண்டறியும் சோதனை (Polygraph and Narco analysis tests)’ மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. (உ.பி முதலிடத்தில் உள்ளது). ஆனால் இக்குற்றத்தைப் பொறுத்தமட்டில், இதைப் பொத்தாம் பொதுவாகப் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களில் ஒன்றாகக் கருதிவிட முடியாது என்பதையே மேற்கூறிய அனைத்துத் தகவல்களும் நமக்கு உணர்த்துகின்றன. உ.பி உட்பட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் “பட்டியல் சாதியினருக்கு எதிராக ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படுகிற வன்முறைகளில் ஒன்றாகவே, அச்சமூகப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பட்டியல் சாதி பெண்களுக்கெதிராக நிகழ்த்தப்படுகிற கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் வெறும் பாலியல் இச்சை மட்டும் காரணமாக அமைவதில்லை; அதற்குப் பின்னால் மிகப்பெரிய சமூகக் காரணியான ‘கட்டமைப்பு ஒடுக்குமுறை’ ஒழிந்துள்ளது”.

பட்டியல் சாதி பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறை, பெரும்பாலும் அவர்களின் சாதிய நிலைமைகளுடனும் நிலைப்பாடுகளுடனும் தொடர்புடையது. அதாவது அவர்கள் குறிப்பிட்ட அந்த நிலப்பரப்பில் உள்ள சாதிய கட்டமைப்புக்களுள், எவ்வாறு பட்டியல் சாதி ஆண்களும் சரி, பெண்களும் சரி இயைந்து நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. மாறாக “சாதி கட்டமைப்பிற்கு ஒத்திசையாமல் அதற்கு எதிராக அவர்களால் காட்டப்படும் ‘எதிர்ப்புணர்வு’, அவர்கள்மீது பாலியல் ரீதியான வன்முறையை ஆதிக்கச் சாதியினர் ஒரு கருவியாகப் பயன்படுத்த, ஆதிக்கச் சாதியினரைத் தூண்டுகிறது. அதனால்தான் மற்ற சமூகப் பெண்களைக் காட்டிலும், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமைகள் குறிப்பாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் பல மடங்கு அதிகமாக நடக்கின்றன; அதை அதிகளவில் நடத்துவதும் ஆதிக்கச் சாதியினராகவே இருக்கின்றனர்.

அரசு, காவல்துறை, நீதிமன்றம் என அனைத்து அரசு எந்திரங்களும் மிக மெத்தனமாகக் கையாள்வதாலேயே, இக்குற்றத்தை நிகழ்த்துபவர்கள் எளிதில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். அதனாலேயே பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் சாதி பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் பெருமளவில் வழக்குகளாகப் பதியப்படுவதுமில்லை; அப்படியே பதிந்தாலும் அக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெருமளவில் தண்டிக்கப்படுவதுமில்லை, என்பதையே தரவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. மேலும் அவர்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்குப் பொதுச்  சமூகமும் பெருமளவில் வெகுண்டெழுந்து போராடாமல், அவற்றைக் கண்டும் காணாமல், கள்ள மௌனம்கொண்டிருப்பதும் இக்குற்றங்கள் நாள்தோறும் பெருகுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

கட்டுரையாளர் – நவநீத கண்ணன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்