ஹத்ராஸ் வழக்கில் விசாரணை செய்து முடிக்க சிபிஐக்கு இன்னும் எவ்வளவு அவகாசம் தேவை என அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளது அலகாபாத் உயர் நீதிமன்றம்.
ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் செப்டம்பர் 14 அன்று கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 15 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை அவசர அவசரமாக அவரது கிராமத்துக்கு எடுத்துச் சென்ற உத்தரப்பிரதேச போலீஸார் நள்ளிரவில் எரியூட்டினர். அவரது குடும்பத்தினரை அவர்களது வீட்டில் அடைத்து வைத்து அவர்களது ஒப்புதல் இல்லாமல் போலீஸ் இதைச் செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, அலகாபாத் உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி அவ்வப்போது விசாரணை தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹத்ராஸ் வழக்கில் விசாரணை செய்து முடிக்க சிபிஐக்கு இன்னும் எவ்வளவு அவகாசம் தேவை என அலகாபாத் உயர்நீதி மன்றம் கேள்வியெழுப்பியுள்ளது, என லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம் வழக்கை நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் ராஜன் ராய் அமர்வு, விசாரணையின் தற்போதைய நிலைமை என்ன என்பதை அறிக்கையாக அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் முழு விசாரணை செய்து முடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவை எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் துறை அதிகாரிகளை, பெண்ணின் குடும்பத்திற்குப் போதிய பாதுகாப்பு வழங்கியுள்ளதை உறுதி செய்யும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தக் குடும்பத்திற்கு என்ன வகையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது குறித்த முழு விவரத்தையும் நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் ராஜன் ராய் அமர்வு அதில் இணைக்கச் சொல்லியுள்ளது.
பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினர் சிபிஐ விசாரிப்பதில் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். அவர்கள், சிபிஐ இதை ஒரு ”ஆணவக் கொலை” என்னும் நோக்கில் விசாரிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான சந்தீப் தாக்கூர் ”பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் இந்த வழக்குகள் எங்கள் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது” என உத்தரப்பிரதேசக் காவல் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணுடன் நட்பாகப் பழகி வந்ததைப் பார்த்த அவரின் குடும்பத்தினர், அந்தப் பெண்ணை ”ஆணவக் கொலை” செய்துவிட்டார்கள் என சிபிஐயிடம் கூறியுள்ளதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிஐயிடம் பதிலளித்த கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் ”நாங்கள் கொலை செய்தால், ஏன் காவல்துறையிடம் புகாரளிக்கப் போகிறோம்” என சிபிஐயிடம் கேள்வியெழுப்பியதாக சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட தாக்கூர் சமூகத்தினரைக் காப்பாற்றும் முயற்சியில் தனது கிராமத்தில் உள்ளவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதாக அந்தப் பெண்ணின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.