Aran Sei

ஹத்ராஸ் கொடூரம் – நீதி கேட்டு நடைபெறும் போராட்டம் ‘சர்வதேச சதியாம்’

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் 19 வயது தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்தது தொடர்பாகவும் அதற்கு பிறகு நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாகவும் அம்மாநில காவல்துறை 19 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது.

மாநிலத்தின் அமைதிய குலைப்பதற்கும், யோகி ஆதித்யநாத் அரசின் நன்மதிப்பை கெடுப்பதற்கும் ‘சர்வதேச அளவில் நடைபெறும் சதி’ என்று அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ‘தி வையர்’ இணையதளத்தில் செய்திவெளியாகியுள்ளது.

தேசதுரோகம், அமைதியை குலைத்து, வன்முறையை தூண்ட முயற்சித்தல், கொரோனா கால விதிமுறைகளை மீறியது ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ, ஹத்ராஸ், அயோத்தி ஆகிய மூன்று நகரங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

அதில், மாநிலத்தின் அமைதியை குலைக்கும் நோக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக ஹத்ராஸ் காவல்நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரஷாந்த் குமார் தி வயர் இணையளத்திடம் கூறியுள்ளார்.

பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு எதிராக கொரோனா ஊரடங்கு விதியை மீறியதாக தொற்று நோய் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கும் இதில் அடக்கம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்ப்பதற்காக நாள்தோறும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஹத்ராஸ் வரும் நிலையில், ஹத்ராசில் மிகப்பெரிய சதி நடப்பதாகவும், உண்மையை கண்டறிய நாங்கள் விரிவான விசாரணை நடத்துவோம் என்றும் காவல்துறை கூடுதல் இயக்குனர் பிரஷாந்த குமார் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் “வளர்ச்சியை விரும்பாத, அதை தடுத்துநிறுத்த நினைப்பவர்கள் நாட்டில், சாதி மற்றும் மத மோதலை தூண்டிவிட நினைக்கிறார்கள்” என்று பாஜக தொண்டர்களுக்கு கூறியுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவல்துறைக்கு தொந்தரவில்லாமல் எவ்வாறு அமைதியாக போராட்டம் நடத்துவது என்பதை விளக்கும் வகையில், காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம் (www.justiceforhathrasvictim.carrd.co) தற்போது முடக்கப்பட்டுள்ளதாக கூறும் காவல்துறையினர், இது சதித்திட்டத்தின் ஒரு அங்கம் என்று தெரிவித்துள்ளதாக தி வயர் கூறுகின்றது.

குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்தது, உயிரிழந்த பெண்ணின் உடலை, குடும்பத்தாரின் அனுமதியின்றி இரவோடு இரவாக தகனம் செய்தது ஆகிய காரணங்களால் உத்தர பிரதேச காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தபெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான பல ஆதாரங்கள் இருந்தபோதும், உத்தர பிரதேச அரசும், காவல்துறையும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்