Aran Sei

‘ஹத்ராஸ் வழக்கில் அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது’ – ராகுல் குற்றச்சாட்டு

Credits: The Wire

அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே ஷஹி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வழக்கு விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், பட்டியல் சாதியைச் சேர்ந்த இளம்பெண் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கு இன்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்பிரீத்சிங் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கினை விசாரித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் 5 பேர், கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ், டிஜிபி அஸ்வதி, மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளது.

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான பெண்ணின் குடும்பத்தினர், இறந்த பெண்ணின் உடல், அவர்கள் அனுமதி இன்றி எரிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

காவலர்களும் மாவட்ட நிர்வாகமும் அவர்களைத் துன்புறுத்தியதாகவும், சம்பவம் நடந்த உடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு குறிப்பிட்டுள்ளது.

பெண்ணின் இறந்த உடல் எரியூட்டப்பட்டது குறித்து ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஸார் முழுப் பொறுப்பேற்றுள்ளார். சட்ட ஒழுங்கு காரணமாகவே பெண்ணின் உடல் நடுராத்திரி எரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

குடும்பத்தினரின் தரப்பு வழக்கறிஞர் சீமா குஷ்வா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் “வழக்கு தொடர்பான சிபிஐ ஆவணங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரியுள்ளனர். வழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.”

“வழக்கு முழுமையாக முடிவடையும் வரை குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.” எனக் கூறியிருக்கிறார்.

இதனிடையே, பெண்கள் பாதுகாப்பு குறித்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ஹத்ராஸ் சம்பவத்தில் அரசாங்கத்தின்  அணுகுமுறை மிகவும் மனிதாபிமானமற்ற வகையில் இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

”பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவதை விடுத்து, அரசாங்கம் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்,

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்