Aran Sei

‘ வன்புணர்வுக்கான தடயங்கள் இல்லை ‘ – ஹத்ராஸ் இறுதி அறிக்கை

credits:indianexpress.com

த்ராஸ் வழக்கில் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை எனத் தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ்-ல் இளம்பெண் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை இறுதி அறிக்கை வெளியிட்டுள்ளது.

தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் முதுகிலும் கழுத்துப் பகுதியிலும் இருந்தாலும் கூட, வன்புணர்வு செய்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பரிசோதனை செய்யப்பட்ட மாதிரியில் விந்தணுக்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மருத்துவர் குழு தலைவர் ஹம்ஸா மாலிக் தி இந்து நாளேடுக்கு அளித்துள்ள பேட்டியில்,

“தடயவியல் ஆய்வு முடிவுகள்படி உடல் உறவில் ஈடுபட்டதற்கான தடயங்கள் மட்டுமே இல்லை. அதனால் வன்புணர்வு செய்யப்படவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது.

சம்பவம் நடந்து எட்டு தினங்களுக்குப் பிறகே தடயவியல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வன்புணர்வு தொடர்பான வழக்குகளில் 72 மணிநேரத்துக்குள் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். விந்தணுக்கள் 90 மணிநேரம் வரை மட்டுமே உயிருடன் இருக்கும்.

மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தை எப்படி நிராகரிக்கலாம்? இதுபோன்ற வழக்குகளில் மரண வாக்குமூலங்கள் முக்கியமான பங்கு வகிக்கும். கவனத்துடன் கையாள வேண்டிய வழக்குகளில் உண்மையை முழுமையாகக் கண்டறியாமல் யாரும் முடிவெடுக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

ஹத்ராஸ் மருத்துவமனை கொடுத்துள்ள பரிந்துரைச் சீட்டில், அந்தப்பெண் மிக மோசமான நிலையில் இருந்ததால், ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படும் வரையில் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் செயற்பாட்டாளர் கௌரவ் ”ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் நீதி கேட்பவர்களை உத்தர பிரதேச காவல்துறை அடித்துத் துன்புறுத்தி வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் முன் அமர்ந்து மிரட்டல் விடுக்கிறார்கள். இதுவே மக்களுக்கான பாஜக அரசாங்கம்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

இதனிடையே நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்துப் பேசிய பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீது தடையை மீறிக் கூட்டம் கூடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்