Aran Sei

ஹத்ராஸ் தீர்ப்பு ஒத்திவைப்பு – `குற்றவாளிகளைக் காப்பாற்றும் காவலர்கள்’

Image Credits: India Legal

மூக ஆர்வலர் சேதன் ஜனார்த்தன் காம்ப்ளே தாக்கல் செய்த ரிட் மனுவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சாட்சியங்களை அழிப்பதில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் உத்தரப்பிரதேசக் காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து சுயாதீன விசாரணை கோரி சமூக ஆர்வலர் சேதன் ஜனார்த்தன் காம்ப்ளே தாக்கல் செய்த ரிட் மனுவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

“சில யுபி மாநிலக் காவல்துறை மற்றும் மாநில அரசாங்க அதிகாரிகள் முறைகேடாக ஆதாரங்களை அழித்தல் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று வழக்கறிஞர் விபின் நாயர் தாக்கல் செய்த சேதனின் ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 15-ம் தேதி, சத்யமா துபே தாக்கல் செய்த மற்றொரு வழக்குடன் இந்த வழக்கின் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை நீதிபதி சரத் ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது நடைபெற்று வரும் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

தனது மனுவில், “அலிகரில் உள்ள அரசு மருத்துவமனை, பாதிக்கப்பட்டவரின் பிறப்புறுப்பு மாதிரிகளையும் உடல் மாதிரிகளையும் சேகரிக்கவில்லை. கிழிந்த நிலையில் கண்டறியப்பட்ட கீழ் ஆடைகளில் இரத்தப்போக்கு இருந்தபோதிலும் துணி மாற்றப்பட்ட பின்னர் படுக்கை விரிப்புகளை எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

சில உயர் காவல் மற்றும் அரசாங்க அதிகாரிகள், விசாரணை முடிவதற்கு முன்னரே, பாலியல் வன்கொடுமைகள் சாத்தியத்தை நிராகரித்ததாகவும், இந்த அளவிற்குப் பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது, “மாநிலக் காவல்துறைக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையிலான தெளிவான தொடர்பைக் குறிக்கிறது” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்டவரின் உடல் இரவில் திருட்டுத்தனமாகத் தகனம் செய்யப்பட்ட விநோதமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையைப் பார்ப்பதில் காவல் அதிகாரிகள் குற்றத்தை விசாரிப்பதை விட அதை மறைப்பதில் ஈடுபட்டுள்ளனரோ என்று சந்தேகமாக உள்ளது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாநிலக் காவல்துறை மற்றும் பிற அரசாங்கக் கருவிகளாலான இந்தச் செயல் மன்னிக்க முடியாத குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை உடலின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான அடிப்படை உரிமையைக் கூட மறுத்தது அவரது ஆன்மாவை அவமதிக்கும் செயல்,” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

“உத்தரப்பிரதேசத்தில் பெறப்பட்ட உளவுத்துறை அறிக்கை, எண்ண மாற்றம் ஏற்பட்டவுடன் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலைக் காவலர்கள் கையாண்டு, எடுத்துச் சென்று தகனம் செய்வது எவ்வாறு சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் என்பதைக் குறிப்பிடவில்லை,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்