டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்துக்கொள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுத்து செல்ல தொடங்கிய போது, அவர்களுக்கும் ஹரியானா மாநில காவல்துறைக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
நேற்று (ஜனவரி 3), ரேவாரி-ஆல்வார் எல்லைக்கு அருகில் விவசாயிகள் வந்த போது, அணிவகுப்பை நிறுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகளை காவல்துறையினர் உபயோகித்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை மீறுவதற்கு விவசாயிகள் முயன்றனர் என்றும் மசானி கிராமத்தில் உள்ள பாலத்திற்கு கீழே நாங்கள் அவர்களை நிறுத்தவிட்டோம் என்றும் ரேவாரி காவல்துறை அதிகாரி அபிஷேக் ஜோர்வால் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று (ஜனவரி 3) பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில், பாஜக மாநில தலைவர் அஸ்வானி குமார் சர்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க அணிவகுத்து செல்ல முயன்ற சில விவசாயிகளை பஞ்சாப் காவல்துறையினர் லத்தியால் தாக்கியுள்ளதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.
‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல முயன்ற போது, அவர்கள் மீது தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை ஹரியானா காவல்துறை வீசியதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஜனவரி 4), போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையேயான ஏழாவது கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடந்த ஆறாவது கட்ட பேச்சு வார்த்தையில், விவசாயிகள் முன்மொழிந்த நான்கு கோரிக்கைகளில் முக்கியத்துவம் குறைவான இரண்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக் களமாக மாறியுள்ளது இந்தியா – ஆய்வு முடிவு
ஆனாலும், இரண்டு முக்கிய கோரிக்கைகளான மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு சட்ட உத்தரவாதம் வழங்குதல் ஆகியற்றிற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.இன்றைய பேச்சு வார்த்தையில் அவை விவாதிக்கப்படும் என்று விவசாயிகள் சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.