Aran Sei

டெல்லி செல்லும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய ஹரியானா போலீஸ் – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை முடக்கப்பட்டது

சிங்கு எல்லையில் போராட்டத்தில் இணைந்த விவசாயிகள் - Image Credit : thehindu.com

டெல்லிக்குச் செல்லும் வழியில் தடுக்கப்பட்ட ராஜஸ்தான் விவசாயிகள் ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை மறித்துள்ளனர் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

மூன்று விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களுக்கும் மின்சாரச் சட்ட திருத்த மசோதாவுக்கும் எதிராகப் போராடி வரும் விவசாயிகள், டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, பல்வேறு எல்லைப் பகுதிகளில் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 17-வது நாளான ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுகொண்டிருந்த நூற்றுக் கணக்கான விவசாயிகளை ஹரியானா போலீஸ் ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தியது.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உட்கார்ந்து போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தினர்.

நர்மதா பச்சாவோ இயக்கத் தலைவர் மேதா பட்கர் மற்றும் சுவராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோரின் தலைமையில் வந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைமையில் டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையும் தடுக்கப்பட்டு விட்ட நிலையில், ஹரியானாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இப்போது விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரியானா – ராஜஸ்தான் எல்லையில் போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றி மேதா பாட்கர், குறைந்த பட்ச ஆதார விலையைச் சட்டப்படி ஏன் உறுதி செய்யக் கூடாது என்று அரசிற்குக் கேள்வி எழுப்பினார். உரங்கள், விதைகள் ஆகியவற்றின் விலை உயர்வோடு சேர்ந்து இப்போது முன் வைக்கப்பட்டுள்ள மின்சார மசோதாவின் காரணமாக மின்கட்டண உயர்வும் சேர்ந்து விவசாயிகளின் சுமை அதிகமாகி விடும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“விவசாயி சோம்பேறியாக இல்லை, விவசாயி ஏழையாக இல்லை. ஆனால், விவசாயிகளின் சொத்துகள் மீதும் வாழ்வாதாரங்கள் மீதும் பன்னாட்டு நிறுவனங்கள் தாக்குதல் நடத்துகின்றன. இந்த மூன்று விவசாயச் சட்டங்களும் சாதாரண மக்களின் உணவுப் பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். பதுக்கலை அனுமதிக்கும் இந்த மூன்று சட்டங்களையும் அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் பேசியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“விவசாயிகள் நெடுஞ்சாலையை மறிக்க விரும்பவில்லை, டெல்லியை நோக்கிதான் சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் ஹரியானா போலீஸ் அவர்களைத் தடுத்து நிறுத்தி சாலை மறியலை உருவாக்கியுள்ளது” என்று யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். ஹரியானா விவசாயிகளைப் பார்த்து பயந்து போய், தனது அனைத்து எல்லைகளையும் மூடிக்கொண்டு விட்டிருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிரடிப் படையினர் உட்பட 600 போலீஸ் படையினர் விவசாயிகளைத் தடுப்பதற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது. பல அடுக்குத் தடுப்புகளையும், கற்களையும் போட்டு நெடுஞ்சாலையின் இரண்டு தடங்களையும் போலீஸ் தடுத்துள்ளது. ஒரு கலவரத் தடுப்பு வாகனம் வஜ்ரா, நீர் பீரங்கிகளும், கண்ணீர் புகை துப்பாக்கிகளும் பொருத்திய இரண்டு வாகனங்கள் போலீஸ் படையின் பகுதியாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஜெய்ப்பூர் செல்லும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும், டெல்லிக்குச் செல்லும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்