Aran Sei

ஹரியானா – விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக தலைவர்

பிரேந்தர் சிங் - Image Credit : https://www.indiatoday.in

ரியானா பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

சவுத்ரி பிரேந்தர் சிங் 2016 முதல் 2019 வரை நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார். இப்போது ஹரியானா மாநிலத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

சவுத்ரி பிரேந்தர் சிங், “கட்சியும் (பாஜக) அரசியலும் இரண்டாம் பட்சமானவை, தான் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்குமே எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வந்துள்ளதாக” கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கானவை என்று பிரச்சாரம் செய்ய முயற்சித்து வரும் நிலையில் ஹரியானா பாஜகவில் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியிருப்பதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது.

விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபைச் சேர்ந்த சிரோமணி அகாலி தள் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, ராஜஸ்தானைச் சேர்ந்த கூட்டணி ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் கட்சி விவசாய சட்டங்களை ரத்து செய்யா விட்டால் கூட்டணியிலிருந்து விலகி விடுவதாக மிரட்டியிருக்கும் நிலையில், பிரேந்தர் சிங் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியா டுடே கருத்து தெரிவித்துள்ளது.

பிரேந்தர் சிங் விவசாயத் தலைவர் சர் சோட்டு ராமின் பேரன் ஆவார். 42 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த பிரேந்தர் சிங் 2014-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அவர் சர் சோட்டுராம் விச்சார் மஞ்ச் அமைப்பில் பல பத்தாண்டுகளாக தொடர்புடையவர் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது.

எதிர்காலத்தில், தான் விவசாயிகளுக்காக மட்டும் பணியாற்றப் போவதாக, அவர் அந்த அமைப்பின் உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

“விவசாயிகள் என்னை அணுகினால் அவர்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக உள்ளேன்” என்று பிரேந்தர் சிங் கூறியுள்ளார். ஹரியானாவின் சம்பலாவில் விவசாய சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் ஒரு நாள் போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவிருப்பதாக ஊகங்கள் வருவதாக இந்தியா டுடே கூறுகிறது.

பிரேந்தர் சிங் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தால், விவசாய சட்டங்கள் குறித்த பாஜகவின் பிரச்சாரத்துக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது.

சமீபத்தில் ஹரியானாவில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஜனநாயக் ஜன்தா கட்சி (ஜேஜேபி) ஹரியானாவில் “டெல்லி சலோ” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“நிலைமை மோசமாகி, விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே நம்பிக்கையின்மை தோன்றுவதற்கு முன்னர் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்” என்று ஜேஜேபி தலைவர் திக்விஜய் சிங் சவுதாலா கூறியுள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்