Aran Sei

ஹரியானா – தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு – உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க சட்டம்

credits : pti

ரியானா மாநிலத்தில் தனியார் துறையின் வேலைவாய்ப்புகளில் 75 சதவீதத்தை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் (பாஜக-ஜேஜேபி) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75 சதவீத இடஒதுக்கீடு என்பது ஜனநாயக ஜனதா கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று.

இந்நிலையில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு “ஹரியானா மாநில இளைஞர்கள் வேலைவாய்ப்பு மசோதா 2020” முன் மொழியப்பட்டது. பின்னர், ஹரியானா சட்டப் பேரவையில் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்று சட்டமாக நிறைவேறியுள்ளது.

ஏற்கனவே ஹரியானாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் எந்த வெளிமாநிலத்தவர்களுக்கும் இந்தச் சட்டத்தினால் பிரச்சனை இல்லை என்றும் இனி ஹரியானாவில் தொடங்க இருக்கும் தனியார் துறையின் வேலை வாய்ப்புகளில் ரூ.50,000 அல்லது அதற்குக் குறைவான சம்பளங்களில் நியமிக்கப்படுபவர்களில் 75 சதவீதம் பேர் ஹரியானா மாநிலத்தவராகவே இருக்க வேண்டும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் தொடங்கப்படும் தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் ஹரியானா மாநிலத்தவருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனத்திலும், ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 10 சதவீதம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

மாநில அரசு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் சமுதாய, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்தும் மேம்பாடு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய ஹரியானா அரசின் குடிமைச் சான்றிதழைப் பெற வேண்டும்.

இதுகுறித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், ஹரியானா இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும் தொடங்கப்படும் தனியார் நிறுவனத்தின் விவரங்கள், ரூ.50,000 க்கும் கீழ் சம்பளம் வாங்கும் நபர்களின் தகவல்கள் என அனைத்தும் ஹரியானா அரசின் தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் தளத்தில் பதிவு செய்யப்படிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு ரூ.25,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநில வேலைவாய்ப்புச் சட்டம் -2020 இன் கீழ், 10 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்டு தொடங்கப்படும் அனைத்துத் தனியார் தொழில்கள், நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் என அனைத்தும் இந்தத் திட்டத்தின் கீழ் வரும் என கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் அவர்கள் எதிர்பார்க்கும் திறனுடன் ஊழியர்கள் கிடைக்கவில்லை என்றால் அரசாங்கத்திடம் முறையாக அறிவித்து அனுமதி பெற்று மற்ற மாநிலத்தின் ஆட்களைப் பணியமர்த்தலாம் எனவும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்திலும் மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து இது போன்ற சட்டம் ஏன் இயற்றக் கூடாது” எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசிடம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார் .

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்