Aran Sei

‘ஹலால் முறையில் விலங்குகளை கொல்ல தடை விதிக்க முடியாது’ – உச்சநீதி மன்றம்

Credits: India.com

ஹலால் முறையில் விலங்குகள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

’ஹலால்’ வழிமுறையில் கொல்லப்படும் இறைச்சி உணவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அகண்ட பாரதம் அமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழக்கினை விசாரித்து, மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் நீதிமன்றம் தலையீடு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கவுல், “ஹலால் என்பது உணவுக்காக விலங்குகளைக் கொல்வதற்கான ஒரு வழிமுறை மட்டுமே. இன்னும் பல வழிமுறைகள் இருக்கின்றன. ஹலாலைப் போல ஜட்கா என்றொரு முறையும் பயன்பாட்டில் இருக்கிறது.” என்ற கூறியுள்ளார்.

“சிலர் ஜட்கா முறையையும் சிலர் ஹலால் முறையையும் பின்பற்றுகிறார்கள். இது எப்படி ஒரு பிரச்சனையாக முடியும்?” என்று கேள்வி அவர் எழுப்பியுள்ளார்.

“சிலர் ஜட்கா இறைச்சி உண்ண விரும்புகிறார்கள், சிலர் ஹலால் இறைச்சி உண்ண விரும்புகிறார்கள். ஒரு சிலருக்கு ஊர்வனவற்றின் இறைச்சி உண்பதில்தான் விருப்பம். யார் சைவ உணவு உண்ண வேண்டும், யார் இறைச்சி உணவு உண்ண வேண்டும் என்பதை நீதிமன்றம் உத்தரவிட முடியாது.“ என்று நீதிபதி கூறியதாக லைவ் லா செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

வாய் பேச முடியாத விலங்குகளால் தானாக நீதிமன்றம் வந்து வாதிட முடியாது. ஐரோப்பிய நீதி மன்றம் கூட ஹலால் வழிமுறையைத் தடை செய்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

விலங்குகள் வதைத் தடுப்புச்சட்டத்தினைக் குறிப்பிட்டு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விலங்குகள் நலனைப் பேணும் கடமை இருக்கிறது என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

”இனி மேற்கொண்டு யாரும் இறைச்சி சாப்பிடக் கூடாது என நீங்கள் நாளை சொல்லக்கூடும்” எனக் குறிப்பிட்டு, இந்த மனு முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் இருப்பதாகவும் நீதிபதி கவுல் கூறியுள்ளார். 

ஹலால் என்பது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பின்பற்றும் வழிமுறை என்றும் அதில் வெட்டப்படும் விலங்கின் உடலில் கடைசிச் சொட்டு ரத்தம் வடியும் வரை உயிர் இருக்க வேண்டும் என்பதால் இது விலங்கினை மிகவும் துன்புறுத்தும் வகையில் உள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

’ஹலால்’ முறை மனிதத்துக்கு எதிராக இருக்கிறது என்று மனுதாரர் கூறியிருந்த நிலையில், நீதிபதி கவுல் ”இந்த மனு வன்மத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்