Aran Sei

கல்லறை சுடுகாடு – ‘வெறுப்பு அரசியலை பரப்பும் பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ்’

Image Credits: Times Now

ரு கிராமத்தில் உள்ள தகன/புதைப்பு இடங்களின் அளவு அங்கு வாழும் சமூகங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பங்கர்மாவ் சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ஒரு தெரு முனைக் கூட்டத்தில் உன்னாவ் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் இக்கருத்தை கூறியுள்ளார்.

2017-ம் ஆண்டு, உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறிய ‘கப்ரிஸ்தான் மற்றும் ஷம்ஷான்’ கருத்துக்களை நினைவுபடுத்தும் வகையில் சாக்ஷி மகாராஜின் கருத்து அமைத்துள்ளது. கிராமங்களில் இஸ்லாமியர்களுக்குப் பெரிய மயானங்கள் இருப்பதால், இந்துக்களுக்கு ‘அநீதி’ இழைக்கப்படுகின்றது என்று சாக்ஷி மகாராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சி பாரபட்சம் காட்டுவதாக மோடி 2017-ல் பேசியிருந்தார். “நீங்கள் ஒரு கிராமத்தில் கப்ரிஸ்தான் (கல்லறை தோட்டம்) உருவாக்கினால், அதற்கு இணையாக ஒரு ஷம்ஷான் (சுடுகாடு) உருவாக்க வேண்டும்”, என்ற மோடியின் கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

“கல்லறை தோட்டங்களும் சுடுகாடுகளும் அந்தந்த சமூகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும்,” என்று சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார்.

“கிராமத்தில் ஒரு இஸ்லாமியர் இருந்தாலும், கல்லறைத் தோட்டம் மிகப் பெரியதாக உள்ளது. ஆனால் நீங்கள் (இந்துக்கள்) இறந்தவர்களை விவசாய நிலங்களில் அல்லது கங்கையில் தகனம் செய்கிறீர்கள். இது கடுமையான அநீதி அல்லவா?” எனச் சாக்ஷி மகாராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிச் சிக்கிக் கொள்ளும் காவி இந்துத்துவ தலைவர் சாக்ஷி மகாராஜின் இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அவர் எந்தச் சூழ்நிலையில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்து சமூகத்தின் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் சோதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பங்கர்மாவ் தொகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பப பங்கர்மாவ் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாளை இத்தொகுதியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்ய விருக்கிறார்.

இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது சாக்ஷி மகராஜுக்கு ஒன்றும் புதிதல்ல. 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, இந்து மதத்தைப் பாதுகாக்க குறைந்தபட்சம் 4 குழந்தைகளையாவது பெற்றெடுக்குமாறு இந்துப் பெண்களை வலியுறுத்தினார்.

உத்தரபிரதேசம் மாநிலம், தாத்ரி பகுதிக்கு உட்பட்ட பிஸாடா கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக முகமது அக்லாக் (51) என்பவர் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட நஷ்டஈடு 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டதை குறித்து பேசிய சாக்ஷி மகாராஜ், “ஒரு இஸ்லாமியர் இறந்தால் அவர்கள் 20 லட்சம் கொடுப்பார்கள், ஒரு இந்து இறந்தால் அவருக்கு 20,000 கூடக் கிடைக்காது,” என்று பேசியிருந்தார்.

பாஜக வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாகவும், ஒவ்வொரு தேர்தலிலும் அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள் என்றும் சமாஜ்வாதி கட்சி கூறியிருப்பதாக நேஷனல் ஹெரால்ட் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்