Aran Sei

கௌதமின் கண்ணாடி மறுக்கப்பட்ட விவகாரம் – மனிதாபிமானம் முக்கியம் என நீதிமன்றம் கருத்து

மும்பை, தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயல்பாட்டாளர் கௌதம் நவ்லாகாவின் மூக்குக் கண்ணாடி திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மனிதாபிமானம் மிக முக்கியமானது என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைக் கைதிகளின் தேவைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்குச் சிறை அதிகாரிகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கௌதம் நவ்லாகாவின் மூக்குக் கண்ணாடி சிறையில் எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்தும், அதற்குப் பதிலாக, அவருடைய குடும்பம் தபாலில் அனுப்பி வைத்த கண்ணாடியை, சிறை அதிகாரிகள் அவருக்கு தர மறுத்ததையும் அறிவோம் என்று நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கர்னிக் கூறியுள்ளனர்.

“மனிதாபிமானம் மிக முக்கியமானது. மற்றவையெல்லாம் அதற்குப் பிறகுதான். இன்று நௌலாகாவின் கண்ணாடி குறித்து நாங்கள் தெரிந்துகொண்டோம். சிறை அதிகாரிகளுக்கும் உடனடியாகப் பயிற்சி அளிக்க வேண்டும்” என்று நீதிபதி ஷிண்டே கூறியதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கு – பார்வை குறைபாடுள்ள நவ்லாகாவுக்கு கண்ணாடி தர மறுப்பு

“இதுபோன்ற சிறிய பொருட்களையும் தடுக்க முடியுமா? இவையெல்லாம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் சிந்திக்க வேண்டியவை” என்றும் நீதிபதி ஷிண்டே கூறியுள்ளார்.

எழுபது வயதான நவ்லாகாவிற்கு, சில உடல்நிலை பிரச்சினைகள் இருக்கின்றன. பார்வை குறைபாடு இருப்பதால் அவருக்குக் கண்ணாடி இல்லாமல் பார்வை தெரியாது. இந்நிலையில் கௌதம் நவ்லாகாவின் கண்ணாடி நவம்பர் 27 அன்று சிறையில் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து கௌதமின் மனைவி சபா ஹுசைன், “கண்ணாடி இல்லாமல் கௌதமிற்குக் கண் தெரியாது எனவும், கண்ணாடி பார்சல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனவும் அதை வாங்கிக்கொள்ள வேண்டும் எனச் சிறை அதிகாரிகளிடம் தகவல் சொல்லியிருந்தோம். இருப்பினும், கண்ணாடி பார்சலில் வந்த பிறகும் அதை வாங்கிக் கொள்ள சிறை அதிகாரிகள் மறுத்திருக்கின்றனர்” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “தன்னைச் சுற்றி இருப்பவற்றைப் பார்க்க முடியாததால், கௌதமின் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாக” சபா ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆர்வலரான நவ்லாகா, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு மற்றும் பீமா கோரேகானில் நடைபெற்ற கலவரத்தில் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்டேன் சாமிக்கு உறிஞ்சுக் குழல் வழங்கப்பட்டது – ஒரு மாத இழுத்தடிப்பிற்குப் பிறகு நடவடிக்கை

இதே வழக்கில், கைது செய்யப்பட்ட 83 வயது ஸ்டேன் சாமி, தன்னுடைய உறிஞ்சுக் குழல் மற்றும் உறிஞ்சுக் குவளையைச் சிறை அதிகாரிகள் பறித்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஒரு மாத இழுத்தடிப்பிற்குப் பிறகு அவருடைய பொருட்கள் ஸ்டேன் சாமிக்குத் திருப்பித் தரப்பட்டன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்