Aran Sei

நாடாளுமன்ற கூட்டம் – விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக தனி விவாதம் நடத்த அரசு மறுப்பு

Image Credit : indianexpress.com

த்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறவுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்பட்டு, மார்ச் 8-ம் தேதி மீண்டும் கூடும். கூட்டத் தொடர் ஏப்ரல் 8-ம் தேதி முடிவடையும்.

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, ஞாயிற்றுக் கிழமை மாநிலங்களவை கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் ஷர்மா, சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், சிபிஎம் கட்சியின் இளமரம் கரீம், திமுகவின் திருச்சி சிவா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக தனி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், விவசாயிகள் பிரச்சினையை ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார். இந்த விவாதத்துக்கு 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகளில் சிலவும் தனி விவாதம் தேவையில்லை என்று கூறியுள்ளன. தெலுகு தேசம் கட்சியின் கே கேஷவ் ராவ், விவசாயிகள் பிரச்சினையை ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் விவாதிக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறியுள்ளார்.

இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மீதான விவாதத்துக்கு, 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயச் சட்டங்கள் தொடர்பாக பல இடங்களில் குறிப்பிடும் ஜனாதிபதியின் உரை தொடர்பாக திருத்தங்களை முன்மொழியப் போவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

நரேந்திர மோடியின் 6 ஆண்டுகால ஆட்சியின் போது ஜனாதிபதி உரை மீது இரண்டு திருத்தங்களை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள் வெற்றி கண்டுள்ளன. ஆனால், இப்போது மாநிலங்களைவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக பலம் உள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

“நாடாளுமன்ற கூட்டத்தின் இரண்டாம் பகுதி வரை (மார்ச் 8-ம் தேதி தொடங்கவுள்ளது) நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. இந்தப் பிரச்சினை மிகவும் அவசரமானது. நாடாளுமன்ற விதிகளையும் நடைமுறைகளையும் முன் உதாரணங்களையும் வெளிப்படையாக மீறி, எந்த விதமான ஆலோசனைகளும் இல்லாமல், நாடாளுமன்ற பரிசீலனையை தவிர்த்து விட்டு அவர்கள் இந்தச் சட்டங்களை நிறைவேற்றினர். இப்போதாவது விவாதிக்க தயாராக இருக்க வேண்டும்” என்று காங்கிஸ் கட்சியின் ஆனந்த் ஷர்மா இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்