Aran Sei

விவசாயிகள் போராட்டம் – ” பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது”

Image Credit : Indian Express

ரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதா வேண்டாமா என்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயச் சங்கங்கள் இன்று முடிவு செய்யவுள்ளன. விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் இன்றைய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும்.

அரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படியும் பேச்சுவார்த்தைக்கான தேதியை அவர்களே தேர்ந்தெடுக்கும்படியும் விவசாய அமைச்சகத்தின் இணை செயலர் விவேக் அகர்வால் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.

அரசு நேரத்தை வீணாக்குகிறது என்று குற்றம் சாட்டிய விவசாயத் தலைவர்கள் இன்று இது தொடர்பாக முடிவெடுக்கப் போவதாகக் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

“அரசு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய விரும்பவில்லை என்பதை கடிதம் காட்டுகிறது. அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து அரசுக்கு அக்கறை இல்லை. இல்லை என்றால் அது முன்பு செய்தது போல பேச்சுவார்த்தைக்கான நேரத்தையும், இடத்தையும் குறிப்பிட்டிருக்கும்” என்று ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் மகாசங்கின் தலைவர் ஷிவ்குமார் காக்கா கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது என்றும், சட்டங்களை திரும்பப் பெறும்படி தாங்கள் அனுப்பிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ள என்றும் விவசாய சங்கத் தலைவர்கள் கருதுவதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், போராட்டத்தில் கலந்து கொள்ள,  நாசிக்கிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

விவசாயிகள், புறப்படுவதற்கு முன்பு மத்திய தலைவர்களின் கொடும்பாவிகளை எரித்ததாகவும் செய்தி தெரிவிக்கிறது. மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குச் செல்கிறார்கள் என்று ஒரு விவசாய சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

இந்த மூன்று சட்டங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை, உணவுப் பொருட்களை பதுக்கலையும், கறுப்புச் சந்தையையும் ஊக்குவிப்பவை என்று விவசாய சங்கங்கள் கருதுவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று நடந்த ஒரு இணையவழி கூட்டத்தில், அரசு எட்டு பிரச்சனைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவை மட்டுமே பிரச்சனை என்று காட்ட முயற்சிப்பதாகக் கூறியுள்ளனர். பிரச்சனை, இந்தச் சட்டங்களின் நோக்கத்தில் உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் தன்னை “யாரும் தடுக்க முடியாது” என்று பிரதமர் மோடி பேசியிருக்கும் முறையையும் அவர்கள் கண்டித்துள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

“உலகெங்கிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலத்தையும், நீர் ஆதாரங்களையும் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். அதன் மூலம் விவசாயிகளுக்கு எதிராக நிற்கின்றனர்” என்று விவசாயத் தலைவர்கள் வாதிட்டுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்