Aran Sei

உரிமைக்காகப் போராடும் விவசாயிகள் : வருமான வரித்துறை கொண்டு மிரட்டும் அரசு

Image Credit : Business Today

மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் போராட்டம், கடந்த 20 நாட்களுக்கும் மேல் டெல்லியில் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு போராடும் விவசாயிகளை பல வழிகளில் மிரட்டும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும், பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா-உக்ரஹான்) வங்கிக் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு, அதற்கு வந்த வெளிநாட்டு நன்கொடைகள் பற்றிய விபரங்களைக் கேட்டு மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

“விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை மிரட்டுவதற்கான அரசின் இன்னொரு முயற்சி இது,” என்று பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா-உக்ரஹான்) சுக்தேவ் சிங் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நன்கொடைகள் தொடர்பாக பதிவு விபரங்களைக் கேட்டு அன்னியச் செலாவணி துறையிலிருந்து மின்னஞ்சல் வந்திருப்பதாக வங்கி அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார்” என்று அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற புதிய விதிகள் – உள்துறை அமைச்சகம்

இது தொடர்பாக, பஞ்சாப் சிந்த் வங்கி ஊழியர் ஒருவர் தி இந்துவிடம் பேசிய போது, “வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டால் அதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல். அன்னிய (பங்களிப்பு) ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் அனுமதி வாங்கும்படி கணக்கு வைத்திருப்பவரிடம் நாங்கள் கூறியிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நேரம் அதன் நோக்கம் குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது என்று சுக்தேவ்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

“விவசாயிகளின் போராட்டத்தை ஒழித்துக் கட்டியே தீருவது என்று முனைந்து நிற்கும் மத்திய அரசின் தூண்டுதலில் இவை எல்லாம் செய்யப்படுகின்றன. ஒரு கணக்கு தணிக்கையாளர் அல்லது வழக்கறிஞரை கலந்தாலோசித்து, அதற்கு தக்க பதிலை அனுப்புவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

“கடந்த இரண்டு மாதங்களில் நாங்கள் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிலிருந்தும் சுமார் ரூ 8 லட்சம் நன்கொடையாக பெற்றிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் பஞ்சாப் விவசாய மண்டி ஆர்தியாக்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறையின் ரெய்டுகள் தொடர்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

வெள்ளிக் கிழமை மாலை தொடங்கிய ரெய்டுகளில் சனிக்கிழமை வரை 7 ஆர்த்தியாக்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த ரெய்டுகளின் போது 2 பேருந்துகள் நிறைய சிஆர்பிஎஃப் வீரர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

’ஆதாரம் இல்லை’ – சேகர் ரெட்டி வழக்கு முடித்து வைப்பு

“வருமான வரித்துறை துணை இராணுவப்படைகளுடன் ரெய்டுக்கு வருகிறதே, நாங்கள் கிரிமினல்களா” என்று நவன்ஷார் ஆர்த்தியா சங்கத் தலைவர் மஞ்சிந்தர் சிங் வாலியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ரெய்டுகளில் குறி வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், போராட்டத்துக்கு பேருந்துகளில் ஆர்த்தியாக்களையும், மண்டி தொழிலாளர்களையும் அனுப்புபவர்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி, நான்கு நாட்களுக்குள், அவற்றுக்கு பதில் தருவதற்கு முன்பே இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன என்று பிசினஸ் டுடே தெரிவிக்கிறது

இந்த வருமான வரித்துறை ரெய்டுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாக பஞ்சாப் ஆர்த்தியா சங்கத் தலைவர் ரவீந்தர் சிங் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையைக் கண்டித்து, “மாநிலத்தில் உள்ள அனைத்து மண்டிகளையும் திங்கள் கிழமை முதல் மூடப் போகிறோம்” என்று அவர் அறிவித்துள்ளார்.

தங்களை இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவதற்கும் ஆர்த்தியாக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று பிசினஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

சண்டிகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் இது பற்றி பேச மறுப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது. வருமான வரித்துறையின் ஒரு மூத்த அலுவலர், இந்தியன் எக்ஸ்பிரசிடம், அவர்கள் டெல்லி தலைமையகத்திலிருந்து வரும் வழிகாட்டலைத்தான் பின்பற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், இந்த ரெய்டுகள் தொடர்பாக ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டித்துள்ளார் என்று tribuneindia.com செய்தி தெரிவிக்கிறது. உள்நோக்கம் கொண்ட இந்த வருமானவரித்துறை ரெய்டுகள் மூலமாக, அரசு ஆர்த்தியாக்களை மிரட்ட முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கருப்பு விவசாயச் சட்டங்களை எதிர்த்த போராட்டத்தை நிறுத்தும்படி விவசாயிகளை ஏற்றுக் கொள்ள வைப்பதிலும், தவறாக வழிநடத்துவதிலும், பிளவுபடுத்துவதிலும் தோல்வியடைந்து விட்ட ஒன்றிய அரசு, ஆர்த்தியாக்களை குறி வைப்பதன் மூலம் அவர்களது போராட்டத்தை பலவீனப்படுத்த முயல்வதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஏதாவது தகிடுதத்தம் செய்து விவசாயிகளின் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என்று முனைந்திருக்கும், ஒன்றிய அரசின் பழிவாங்கும் அரசியல் என்பதற்கான தெளிவான வெளிப்பாடு இல்லாமல், இது வேறு என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ரெய்டுகளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கண்டித்து ட்வீட் செய்துள்ளார். “இது விவசாயிகளின் இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“இன்று ஒட்டு மொத்த நாடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. யார் மீது ரெய்டு விடுவீர்கள்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்