Aran Sei

`கூகுள் பே வாட்ஸ்அப் பாதுகாப்பு இல்லையா?’ – பினாய் விஸ்வம்

Image Credits: Financial Express

மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதி மன்றம் ஒப்புக்கொண்டுள்ளது என்று ‘தி இந்து’ செய்தி குறிப்பிடுகிறது. அதில், `யுனைடெட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தளங்களில் இந்தியப் பயனர்களின் முக்கியமான தரவுகளை, ரிசர்வ் வங்கியும் தேசியக் கொடுப்பனவுக் கழகமும் பாதுகாக்கத் தவறியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்

“‘நான்கு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மூன்று அதாவது அமேசான், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் / வாட்ஸ்அப் (சோதனைக் கட்டம்) ஆகிய நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினாலும் அதிக ஆய்வு இல்லாமல் யுபிஐ பணப் பரிமாற்றத்தில் பங்கேற்க ரிசர்வ் வங்கியும் என்பிசிஐயும் அனுமதி அளித்துள்ளன,” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஷரத் ஏ.போப்டே தலைமையிலான அமர்வு ரிசர்வ் வங்கி, என்பிசிஐ மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிதிப் பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள் யுபிஐ தரவுகளைத் தங்கள் சொந்த நிறுவனங்களுக்கோ மூன்றாம் தரப்பினருக்கோ பகிரவோ, பயன்படுத்தவோ கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும் வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் பரக்கத், விஷ்ணு சங்கர் ஆகியோரால் பினாய் விஸ்வம் சார்பில் வாதிட்டனர். “ரிசர்வ் வங்கியும் என்பிசிஐயும் நடந்து கொண்டது இந்தியப் பயனர்களின் முக்கியமான நிதித் தரவுகளைப் பெரும் அபாயத்துக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக கூகுள், வாட்ஸ்அப், அமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து தமது ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தரவுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

தேவையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாட்ஸ்அப் “வாட்ஸ்அப் பே’-ன் முழு அளவிலான நடவடிக்கைகளைத் தொடங்குவதில்லை என்பதை உறுதிசெய்ய ரிசர்வ் வங்கிக்கும் என்பிசிஐக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பயனர்களின் நிதித் தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 2018-ல் அவர்கள் பயன்படுத்தும் கட்டண முறை தொடர்பான முழுத் தரவுகளும் இந்தியாவில் சேமிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு 2018 அக்டோபர் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

“இருப்பினும் இந்த நிறுவனங்கள் குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் கூகுள் பே ஆகியவை அக்டோபர் 2018 காலக்கெடுவை நிறைவேற்றத் தவறின. ரிசர்வ் வங்கி, வாட்ஸ்அப், கூகுள் பே போன்றவற்றுக்கு உதவும் வகையில், இந்தியப் பயனர்களின் நிதித் தரவுப் பாதுகாப்பை முற்றிலுமாகப் பொருட்படுத்தாமல் கேள்வி-பதில் ஒன்றை (FAQs) வெளியிட்டதன் மூலம் ஏப்ரல் 2018 சுற்றறிக்கையை நீர்த்துப் போகச் செய்து வெளிநாடுகளில் அனைத்துக் கட்டணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள அனுமதித்தது,” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்