Aran Sei

” கோவாவின் பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக உள்ளது ” – தலைமை நீதிபதி போப்டே

image credit : thewire.in

ந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற விவாதம் நடந்து வரும் நிலையில், இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே சனிக்கிழமையன்று கோவாவின் பொது சிவில் சட்டத்தை பாராட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும் அறிவுத்துறையினர், கோவாவுக்குச் சென்று பொது சிவில் சட்டத்தின் செயல்பாட்டை பார்க்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார் என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, புத்த மதம், இந்து மதம், ஜைன மதம், சீக்கிய மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கான இந்து சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கிறித்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள், பார்சிகள் ஆகியோருக்கு தனிதனிச் சட்டங்கள் வழக்கத்தில் உள்ளன.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 17.2 கோடி முஸ்லீம்களும், 2.7 கோடி கிறித்துவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டம் உருவாக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பான்மைவாதத்தை சுமத்தும் முயற்சி என்று அது சிறுபான்மை மதத்தினரின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் போர்ச்சுகீசிய சட்டத்தின் அடிப்படையில் கோவா மக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டது, அது சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்கிறது. மிகச்சிறிய மாநிலமான கோவாவின் மக்கள் தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் முதல் வாரம், உச்சநீதிமன்றம், மத அடிப்படை இல்லாத வாரிசுரிமை சட்டங்கள் தொடர்பான மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினருமான அஷ்வினி உபாத்யாய், பொது சிவில் சட்டத்துக்கு முன்னோடியாக பார்க்கப்படக் கூடிய, 5 மனுக்களை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்வதில் வெற்றி அடைந்துள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, கோவாவின் போர்வோரிமில் பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கான ஒரு புதிய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். அந்த விழாவில் போது அவர் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினையைக் குறித்து பேசியுள்ளார்.

“நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் கனவு கொண்ட, பொது சிவில் சட்டம் கோவோவில் உள்ளது.” என்று அவர் கருத்து தெரிவித்தார். “அந்த பொது சிவில் சட்டத்தின் கீழ் நீதி வழங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என்றும் பேசியுள்ளார்.

மேலும், “பொது சிவில் சட்டம், திருமணம் தொடர்பான வழக்குகளுக்கும் வாரிசுரிமை தொடர்பான வழக்குகளுக்கும் பொருந்துகிறது. மத வேறுபாடு இல்லாமல் எல்லா கோவாவினருக்கும் அது பொருந்துகிறது. பொது சிவில் சட்டம் பற்றி பலர் பேசுவதை கேட்டிருக்கிறேன். அந்த அறிவுத் துறையினர் எல்லோரும் கோவா வந்து நீதி நிர்வாகத்தை கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் பேசியுள்ளார்.

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கோவா கிளையில் பணியாற்றிய காலத்தைக் குறிப்பிட்டு பேசிய அவர், அந்தக் குறிப்பிட்ட கிளைக்கு தனித்துவமான இயல்பு, தனது முன் வந்த பல்வேறு வழக்குகள் என்று அவர் கூறினார். உச்சநீதிமன்றம் அளவுக்கு பலவிதமான அனுபவங்களையும் சவால்களையும் தரும் கிளை ஒன்று இந்தியாவில் இருந்தால், அது கோவாவில் உள்ள அரசியலமைப்பு அமர்வு மட்டுமே என்று அவர் கூறினார்.

“நீங்கள் கோவாவின் ஒரு அரசியலமைப்பு அமர்வில் பணியாற்றும் போது பலவகையான வழக்குகளை சந்திக்கலாம். ​​நிலம் கையகப்படுத்தும் வழக்கு, பிரிவு 302-ன் கீழான கொலை வழக்கு மீதான மேல்முறையீடு, ஒரு பொது நல வழக்கு, நிர்வாகச் சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி, வருமான வரி, விற்பனை வரி மற்றும் கலால் சட்டம் என்று பல்வேறு வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன” என்று அவர் மேலும் கூறினார். .

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக ஆகவிருக்கும் நீதிபதி என்.வி.ரமணா, நீதித்துறை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கவும், தேசிய நீதி உள்கட்டமைப்பு கழகத்தை நிறுவவும் அழைப்பு விடுத்தார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது..

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்