Aran Sei

காசிப்பூர் – அரசின் மிரட்டலுக்கு அஞ்சாத விவசாயிகள், விலகும் போலீஸ்

Image Credit : thewire.in

றுதிக் கெடு விதித்திருந்த போதிலும், விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்தின் அறைகூவலும், மேலும் ஏராளமான விவசாயிகள் அங்கே போராட்டத்தில் வந்து குவிவதும் ஊக்கியாக செயல்பட்டதால், காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அந்த இடத்தை விட்டுக் காலி செய்ய உத்திரப்பிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

முறையான உத்தரவுகள் இல்லாத நிலையில், காசிப்பூர் மாவட்ட நீதிபதி வியாழக்கிழமைக்குள் (28/1/2020) விவசாயிகள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று “வாய்வழி இறுதி எச்சரிக்கை” விடுத்திருந்தார்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஏராளமான காவல்துறை படை அங்கு குவிக்கப்பட்டது. நமது நிருபர் சேகர் திவாரி அரசின் உத்தரவு குறித்து விவசாயிகளின் கருத்தை அறிய நேற்று (28/1) இரவு அங்கு சென்றிருந்தார். பலரும் மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர்வது என்ற முடிவில் தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.

“எங்கள் மீது தடியடி நடத்தினாலும் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் போராட்டக் களத்தை விட்டு நாங்கள் வெளியேறமாட்டோம்,” என்கிறார் ஒரு விவசாயி.

ஜனவரி 26 டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை, போராட்டத்தின் நோக்கத்தை நாசமாக்கிட வேண்டும் என விரும்பியவர்கள் தூண்டிவிட்டதால் நடந்தது என்கின்றனர் சில விவசாயிகள்.

“நாங்கள் அமைதிவழியில் போராடுவதால் எங்களை வலுக் கட்டாயமாக இங்கிருந்து வெளியேற்ற முடியாது என அரசுக்குத் தெரியும். எனவே வன்முறை அவர்களுக்கு எங்களை வெளியேற்ற ஒரு வாய்ப்பைக் கொடுத்தது,” என்கிறார் ஒரு விவசாயி.

வந்து கொண்டிருக்கும் செய்திகளின் படி, கூட்டம் அதிகமாக கூடி வருவதாலும், களத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக நிற்பதாலும் கூடுதலாகப் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை படைகள் இன்று (29/1) அதிகாலையில் விலக்கிக் கொள்ளப்பட்டன.

“போராட்டக் களத்திலிருந்து மேலதிக பாதுகாப்பு படைகள் திரும்பப் பெறப்பட்டன. மிகவும் குறைந்த அளவு படையினரே நிறுத்தப்பட்டுள்ளனர்,” என்று பெயர் வெளியிட விரும்பாத காசிப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

குற்றவியல் சட்ட 133 பிரிவின் கீழ் பொதுஅமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி சில பிகேயூ (BKU) தலைவர்களுக்கு தாக்கீதுகள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக, பிகேயூ தலைவர் ராகேஷ் திகாயத் போராட்டக் களத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேசினார். ஏற்கனவே குடியரசு தின வன்முறைகளுடன் தொடர்புபடுத்தி, பல முதல் தகவல் அறிக்கைகளில் அவரது பெயர் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், சரணடைய மறுத்திருக்கும் திகாயத் இடத்தை காலி செய்ய நினைத்திருந்த சில விவசாயிகளுக்கு தன் அறைகூவலை விடுத்தார்.

அவர் மேடையை விட்டு இறங்கி ஊடகங்களிடம் பேசினார். அப்போது கண்ணீர் பெருக அவர் இந்த “விவசாயச் சட்டங்களை எதிர்த்த போராட்டத்தை கைவிடுவதை விடத் தான் தன் உயிரை விடவும் தயார்,” எனக் கூறினார்.

ஜனவரி 26 நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றம் நியமிக்கும் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரினார். “சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக வித்தியாசமான சூழலை உருவாக்க முயற்சிக்கிறது. செங்கோட்டை நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் அனைவருடைய விவரங்களும் பொதுவெளியில் வரவேண்டும்,” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறினார். “தீப் சிந்துவின் தொடர்பும் நாட்டின் முன் கொண்டுவரப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு இதனை புலனாய்வு செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

நேற்று இரவோடு இரவாக பாதுகாப்புப்படைகள் வெகுவாக குறைக்கப்பட்டுக் கொண்டிருந்த போதும், பிகேயூ வின் அழைப்பை ஏற்று, மேற்கு உத்திரபிரதேச மாவட்டங்களான மீரட், பாக்பட், பிஜ்னோர், முசாஃபர்நகர், மொராதாபாத், புலந்தசகர் ஆகியவற்றிலிருந்து மேலும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள அதிகாலையிலேயே உத்தர பிரதேச நுழைவாயிலுக்கு வந்துவிட்டனர்.

ஏராளமான போராட்டக்காரர்கள் மூவர்ணக் கொடியை வீசிக் கொண்டு வர, சிலர் பிகேயூ போன்ற விவசாய சங்கக் கொடிகளை ஏந்தி, “ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!” என்று தொடர்ந்து முழங்கிய படி வலம் வந்து கொண்டிருந்தனர். பலரும் எலும்பை உலுக்கும் குளிர்காற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கம்பளிகளை சுற்றிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

“போராட்டக்களத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிர்வாகத்தின் அறிவிப்பை ஏற்று நீங்கள் வெளியேறிவிடுவீர்களா” என்று கேட்டபோது, “தேவைப்பட்டால் நான் நின்று கொண்டே போராடுவேன். உட்கார்ந்து போராடுவதைப் பற்றி கேட்கவே தேவையில்லை” என்கிறார் 78 வயதான ஜகத் சிங் ரதி.

தலையில் மஃப்ளருடன், கையில் கைத்தடியுடன் நிற்கும், மீரட்டைச் சேர்ந்த எழுபதுக்கும் அதிகமான வயதுடைய அவர், பிகேயூ இந்தப் போராட்டத்தைத் துவங்கிய கடந்த ஆண்டு நவம்பர் 28 லிருந்து களத்தில் இருக்கிறார்.

“(உத்தர பிரதேச வாயிலை) காலி நஹி கரேங்கே. அதற்கான உத்தரவு எதனையும் நாங்கள் பார்க்கவில்லை. உச்சநீதிமன்றம் விவசாயிகளுக்கும் போராட உரிமை உள்ளது என்று கூறியிருக்கும் போது வேறென்ன வேண்டும்? நாங்கள் போராடுவோம்,” என்று பதில் கூறினார்.

முசாஃபர்நகரிலிருந்து 40- 50 விவசாயிகளுடன் உத்தர பிரதேச வாயிலை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளார் அங்கித் ஷராவத் என்ற விவசாயி.

“மேற்கு உத்தர பிரதேசத்திலிருந்து இன்னும் அதிகமான விவசாயிகள் இங்கே வர உள்ளனர். அனைவரும் டெல்லியில் குடியரசு தினம் அன்று நடந்ததை கண்டிக்கின்றனர். இப்போது அவர்கள் சவுதிரி சாகேப்பை (ராகேஷ் திகாயத்தை) அழ வைத்து விட்டனர். திகாயத் கண்ணீர் சிந்துவதை எந்த விவசாயியும் பொறுத்துக் கொள்ள மாட்டான்,” என்கிறார் 35 வயதான அங்கித்.

www.thewire.in இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்