கர்நாடகாவிலிருந்து 50 பேர் கொண்ட விவசாயிகளின் குழு காசிப்பூர் எல்லைக்கு வந்து மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் இணைந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடகா ராஜ்ய ராய்த்தா சங்கத்தைச் (KRRS)-ஐச் சேர்ந்த விவசாயிகளும் தலைவர்களும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்தைச் சந்தித்து, இன்னும் அதிகமான விவசாயிகளை போராட்டத்துக்கு அழைக்கப் போவதாக உறுதியளித்துள்ளனர்.
“KRRS எங்களுக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் இங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகளை அனுப்பத் தயாராக உள்ளனர். சிறு குழுக்களாக வரும்படி நாங்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை நாங்கள் செய்ய முடியும். போலீசும் அவர்களை தடுக்க முடியாது” என்று பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
KRRS-ஐச் சேர்ந்த சரத்குமார், “பெங்களூருவிலும் மைசூரிலும் இந்த மாதம் போராட்டங்கள் நடத்தினோம். உத்தர பிரதேசத்தின் மகாபஞ்சாயத்திலும் கலந்து கொண்டோம். இங்கு உள்ள விவசாயிகளுடன் உட்கார்ந்திருக்க தயாராக வந்துள்ளோம்.” என்று கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“எனது மனைவியும் எனது சகோதரரும் எங்கள் காய்கறி தோட்டத்தை கவனித்துக் கொள்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “ஓரிரு மாதங்கள் தங்கிய பிறகு நாங்கள் திரும்பிச் செல்வோம். அதன் பிறகு எங்கள் சகோதரர்களை இங்கு போராடுவதற்கு அனுப்புவோம்.” என்று அவர் கூறியுள்ளார்.
“குழு குழுவாக வரும்படி தலைவர்கள் கூறியுள்ளனர். இல்லை என்றால் போலீஸ் அல்லது அரசு எங்களை குறி வைத்து இங்கு வருவதை தடுத்து விடுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்” என்று கோலாரைச் சேர்ந்த விவசாயி ஆர் கேஷவா கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
ஒரு வாரமாக உத்தர பிரதேசத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், தனது கிராமத்தில் இருந்து விவசாயிகள் இங்கு வந்து போராட்டக்காரர்களை சந்திக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், கர்நாடகா மாநிலங்களின் விவசாய அமைப்புகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக திகாயத் சனிக்கிழமை கூறியிருந்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.