Aran Sei

மத உரிமைகளுக்கு எதிராகத் திரளும் மாநிலங்கள் – கேள்விக்குள்ளாகும் அரசமைப்புச் சட்டம்

சிறப்பு திருமணச் சட்டம், 1954 (SMA) வெவ்வேறு மத நம்பிக்கைகளை கொண்ட தம்பதிகளின் திருமணத்தை எளிதாக்குவதற்காக இயற்றப்பட்டது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இச்சட்டத்தின் அம்சங்கள் குறித்து ஆட்சேபனைக்  குரல்கள் எழுகின்றன.

இப்படியான குரல்களால் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்வோருக்குப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த அச்சத்தையும் கேள்வியையும் எழுப்புகிறது. பலர் தங்களின் திருமணங்களை தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செய்கின்றனர். சிலர் மதம் மாற்றத்தைத் தேர்வு செய்கின்றனர். விருப்பத்திற்கு ஏற்றவாறு திருமணம் செய்து கொள்வதில் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  உத்தரபிரதேசம், ஹரியானா முதலமைச்சர்கள் மற்றும் கர்நாடக அமைச்சரின் சமீபத்திய கருத்துக்கள் அந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. திருமண நோக்கத்திற்காக மதம் மாற்றத்தைத் தடை செய்ய வேண்டும் என்று இவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“கர்நாடகாவில் மத மாற்ற தடைச்சட்டம் இயற்றப்படும்” – கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ரவி

சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ன்படி திருமணம் செய்து கொள்ள சில விதிமுறைகள் உள்ளன. ஆணுக்கு 21 வயதும் பெண்ண்ணுக்கு 18 வயதும்  பூர்த்தியாகி இருக்க வேண்டும். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்திருக்க கூடாது. இருவரும் சம்மதம் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும். மனப்பிறழ்வு நோய் இருக்க கூடாது.

திருமணம் செய்துகொள்ள இருப்பவர்கள் ‘திருமணத்தை நடத்தி வைக்கும் அதிகாரியிடம் ‘ மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை திருமணப் பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு அதன் ஒரு நகலை அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டுவார். திருமணப் பதிவேட்டை எவ்வித கட்டணமும் இல்லாமல் எவரும் பார்க்க இயலும்.

மனுதாரரின் குடியிருப்பு மனு கொடுக்கப்பட்ட அதே மாவட்டத்தில் இருக்கிறதா என்று சோதனைச் செய்யப்படும். அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர் இல்லையென்றால்  அவரின் சொந்த மாவட்ட அதிகாரிக்கு மனுவின் நகல் அனுப்பப்படும். அந்தத் தகவலும் அறிவிப்புச் செய்யப்படும். அறிவிப்பு வெளியான மூன்று மாதங்களுக்குள் திருமணத்தை உறுதிப்படுத்த வேண்டும், அது இல்லையென்றால், புதிய அறிவிப்பு தேவைப்படும்

மனுக் கொடுத்து, 30 நாட்கள் காத்திருந்து, ஆட்சேபனை ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து ஆட்சேபனை இருந்தால் அது குறித்து விசாரித்து 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். திருமணம் நடத்திவைக்கும் அதிகாரி அனுமதி மறுத்தால், மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தின் திருமணம் செய்ய ஆட்சேபனை இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்..

பதிவு அலுவலகத்தில் திருமணம் குறித்த செய்தியை யார் வேண்டுமானாலும் பார்க்க இயலும் என்பதால் , வெவ்வேறு மதங்களில் மணஉறவு வைத்துக் கொள்ள இருப்பவர்கள் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் – உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் அறிவிப்பு

வகுப்புவாத பிரச்சாரத்திற்காக இவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற புகார்களைத் தொடர்ந்து, ஜூலை மாதம், கேரள பதிவுத் துறை தனது வலைத்தளங்களில் திருமண அறிவிப்புகளைப் பதிவேற்றும் நடைமுறையை நிறுத்த முடிவு செய்தது.

இந்த விதிகள் தம்பதிகளின் தனியுரிமையை மீறுகின்றன என்ற அடிப்படையில்  உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப் பட்டது. இந்து மற்றும் முஸ்லீம் திருமணச் சட்டங்களைப் பொறுத்தவரை, முன் அறிவிப்பு தேவையில்லை.சிறப்புத் திருமண சட்டம் ( SMA)  அறிவிப்புகளைக் கோருகின்றது. இதனால் இந்த திருமணத்தைத் தேர்ந்தெடுப்பவர்களின் சமத்துவத்திற்கான உரிமையை சட்டம் மீறுகிறது என்றும் விவாதிக்கப்பட்டது.

பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில்,  அவர்களில் ஒருவர் மற்றவர் கூறும் மதத்திற்கு மாறுவது இயல்பு. இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு முறையான வழிமுறைகள் இருந்தாலும், இந்து மதத்திற்கு மாறுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வழிமுறை இல்லை.

அலகாபாத் உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில்  “மணமகள் இந்து மதத்திற்கு மாறிய ஒரு இஸ்லாமியர்” அவரின் கடந்தகால முன்மாதிரிகளை மேற்கோள் காட்டி  தம்பதியினருக்கு போலிஸ் பாதுகாப்பை வழங்க மறுத்துவிட்டது.  மத மாற்றம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.  திருமண நோக்கத்திற்காக இருக்கக்கூடாது என்றும் கூறியது .

ஹரியானாவிலும் “லவ் ஜிகாத்”துக்கு எதிராகச் சட்டம் – தொடரும் வெறுப்பு அரசியல்

 

இமாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டம், 2019, மற்றும் உத்தரகண்ட் மத சுதந்திரச் சட்டம், 2018 ஆகியவை  பலம், மோசடி, தேவையற்ற செல்வாக்கு, தூண்டுதல், கவர்ச்சி மற்றும் ‘திருமணத்திற்காக’ மதம் மாற்றுவதைத் தடைசெய்கின்றன.

உத்திரப்பிரதேச மாநில சட்ட ஆணையம் திருமணத்திற்காக மதம் மாறுவது தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இனி குடும்ப நீதிமன்றங்கள் அத்தகு திருமணங்களை  ரத்து செய்யக்கூடும்.

(தி இந்துவில் வெளியான கே.வெங்கடராமன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்