Aran Sei

உத்தர பிரதேசத்தில் பிணமாக கண்டெடுக்கபட்ட 2 சகோதரிகள் – ஆணவக் கொலை என்று காவல்துறை தகவல்

image credit : ndtv.com

த்தர பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 18 வயதான, 20 வயதான இரண்டு சகோதரிகளின் இறப்புக்கு அடுத்த நாள், “நாங்கள்தான் அவர்களைக் கொன்றோம் என்று வாக்குமூலம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறோம்” என்று அந்தப் பெண்களின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த இரண்டு சகோதரிகளின் அண்ணன், செவ்வாய் அன்று போலீசிடம் புகார் கொடுத்திருந்தார். அதில், “மார்ச் 22-ம் தேதி (திங்கள் கிழமை) மாலை 7 மணி அளவில் எனது தங்கைகள் வெளியில் சென்றனர். அவர்கள் நீண்ட நேரம் திரும்பி வராததால் நாங்கள் தேட ஆரம்பித்தோம். சுமார் 9 மணி அளவில் ஒரு தங்கையின் உடல் சாலையோரமாக கிடந்ததை கண்டறிந்தோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

“அடுத்த நாள் காலை சுமார் 7 மணி அளவில் இன்னொரு தங்கையின் உடல் ஒரு மரத்தில் இருந்து தொங்குவதை கண்டோம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்று அவரது புகாரில் கூறப்பட்டிருந்தது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் வரை இறுதி சடங்குகளை செய்யப் போவதில்லை என்று அந்தப் பெண்களின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

“அவங்க எப்படி இறந்தாங்கன்னு போலீஸ் கேட்டாங்க. நீ அங்கதான் இருந்திருப்ப அல்லது உன் அம்மா என்றார்கள். நான் எதையும் பார்க்கவில்லை என்றும் என் அம்மா அவர்களைத் தேடி போனார் என்றும் சொன்னேன். உன் வீட்டுக்காரரும் மாமியாரும் அவர்களை கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார்கள் என்று போலீஸ் சொன்னது. அப்படி வாய்ப்பில்லை என்று நான் மறுத்த போது பெண் போலீஸ் என்னை கம்புகளால் அடித்தார்கள்” என்று இறந்து போன பெண்களின் அண்ணன் மனைவி கூறியுள்ளார்.

பிலிபித் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெய் பிரகாஷ் யாதவ் இது ஒரு ஆணவக் கொலை என்று கூறியுள்ளார். “அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இளைய சகோதரி தூக்கிலிடப்பட்டு இறந்ததாகவும், மூத்த சகோதரி கழுத்தை நெறிக்கப்பட்டு இறந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“திருமணம் நிச்சயமான பிறகும் அந்தப் பெண்கள் தமது காதலர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். ஒரு பெண்ணின் காதலர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே, அந்தப் பெண்களின் சகோதர்கள் அவர்களைக் கொன்று உடல்களை எறிந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்களுக்கு இது தெரியும். நேரில் பார்த்த சாட்சியங்களும் உள்ளன” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

புதன் கிழமை மதியம், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அந்தப் பெண்களின் உடல்கள் கிராமத்தில் புதைக்கப்பட்டுள்ளன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

“அவர்களது குடும்பத்துக்கு ஆதரவாக உடல்களை எரிப்பதற்காக போலீஸ் விறகுக் கட்டைகளை கொண்டு வந்தது.” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். ஆனால், அந்த சமுதாயத்தில் திருமணமாகாத பெண்கள் இறந்தால் அவர்களது உடலை எரிக்கும் வழக்கம் இல்லை, புதைக்க வேண்டும் என்று கூறவே, எக்ஸ்கவேட்டர்களைக் கொண்டு குழி தோண்டப்பட்டது.

“குடும்பம் புதைக்க வேண்டும் என்று கேட்ட பிறகு, இறுதிச் சடங்கு அமைதியான சூழலில் நடைபெற்றது” என்று எஸ்பி ஜெய் பிரகாஷ் யாதவ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்