இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் பொது முடக்க காலத்தில் 1,550 டன் உணவு தானியம் பாழாகியுள்ளது என்று நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவின் மூலமாக தெரியவருகிறது.
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நாடு தழுவிய பொது முடக்க நடவடிக்கையை மார்ச் 25-ம் தேதி அறிவித்தது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 1550 டன் உணவு தானியம் பாழாகியுள்ளது. ஜூலை மாதத்தில் 41 டன், ஆகஸ்ட் மாதத்தில் 51 டன் கிடங்கில் வீணாகியுள்ளன.
இயற்கை பேரிடர் காரணமாகவும் கிடங்கிலிருந்து உணவு தானியங்களை வெளியே எடுத்துச்செல்லும் வழியிலும் குறைந்த அளவில் உணவு தானியங்கள் வீணாவது வழக்கமானது என்று நுகர்வோர் விவகார அமைச்சம் தெரிவித்துள்ளது.
உணவு தானியங்களுக்கு ஏற்படும் சேதாரங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது அமைச்சகத்தின் வழக்கம் என்றும் 2014-18-ம் ஆண்டில் மட்டும் 125 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளது.
அறிவியல்பூர்வமான பதப்படுத்தல் முறைகளை பயன்படுத்தி உணவு தானியங்கள் வீணாவது குறைக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் விவகார அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சென்ற ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.
அரசு 2015-16-ம் ஆண்டில் 6 கோடியே 3 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை கொள்முதல் செய்தது. அதில் வெறும் 3116 டன்கள் மட்டுமே பாழாகியது. இது மொத்த கொள்முதலில் 0.005 விழுக்காடு ஆகும்.
2016-17-ம் ஆண்டில் 0.014 விழுக்காடு அளவு தானியமும் 2017-18-ம் ஆண்டில் 0.003 விழுக்காடு தானியமும் 2018-19-ம் ஆண்டில் 0.14 விழுக்காடு தானியமும் பாழாகியுள்ளது.
2019-20-ம் ஆண்டில் 7.5 கோடி டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. அதில் வெறும் 1930 டன்கள் மட்டுமே பாழாகியது என்று நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
பொது முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 8 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் வெறும் 33 விழுக்காடு மட்டுமே விநியோக்கிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.