Aran Sei

போராட்டத்துக்குப் பின் அகற்றப்பட்ட பா.ஜ.க கொடிக்கம்பம்

      
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் உள்ள பழனிபாபா நினைவிடத்துக்கு அருகே, பா.ஜ.கவினர் தங்களது கட்சிக் கொடியினை நட்ட சம்பவம் பெரு சர்ச்சைக்கு ஆளானது. இதனைக் கண்டித்து இசுலாமிய அமைப்புகள் மற்றும் திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தை அடுத்து அக்கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. 

செப் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயக்குடியில் பழனிபாபா நினைவடத்தை ஒட்டியே பா.ஜ.கவினர் கொடிக்கம்பம் நட்டு, கொடியேற்றினர். பழனிபாபா நினைவிடத்துக்கு அருகிலேயே கொடிக்கம்பம் நட்டிருப்பதற்குப் பின் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

“சில மாதங்களுக்கு முன் பழனியில் அனைத்து இசுலாமிய இயக்கங்களும் ஒன்றிணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தினோம். அதற்கு எதிர்வினையாற்றும்படி இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து ஓர் பொதுக்கூட்டத்தை நடத்தினர். அக்கூட்டத்தில் பேசிய விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த செந்தில் என்பவர் “எங்ககிட்ட மோத வேண்டாம். நாங்க ஒரு தரமான சம்பவம் பண்ணியிருக்கோம். ஆயக்குடியில் ஒருத்தனை தலை தலையாக அடிச்சு அடக்கம் பண்ணியிருக்கோம்” என பழனிபாபாவைக் குறிக்கும் விதத்தில் பேசினார்.  இந்நிலையில் மோடி பிறந்த நாளையொட்டி பழனிபாபா நினைவிடத்துக்கு அருகிலேயே கொடி நட்டுள்ளது அவர்களின் இசுலாமிய வெறுப்பு அரசியல்தான்” என்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஃபரூக். 

மேலும் அவர், “போலீஸ் முன்னிலையில்தான் இக்கொடியேற்ற நிகழ்வு நடந்திருக்கிறது. தகவலறிந்து இசுலாமிய அமைப்புகள் மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கொடிக்கம்பத்தை அகற்றும்படி போராடினோம். காவல் துறையினருடன் நடந்த பேச்சு வார்த்தையில் அக்கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னரே நாங்கள் போராட்டத்தைக் கை விட்டோம்” என்கிறார் ஃபரூக். 

இப்போராட்டத்தைத் தொடர்ந்து 18ம் தேதி காலை நான்கு மணியளவில் காவல் துறையின் உத்தரவின் பேரில் பா.ஜ.க கட்சியினர் கொடிக்கம்பத்தை அகற்றினர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்