Aran Sei

சத்தீஸ்கர் கண்ணி வெடி குண்டு தாக்குதல் – பேருந்தில் சென்ற மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படையினர் 5 பேர் பலி

Image credit : thehindu.com

த்தீஸ்கரில் மாவோயிஸ்ட் போராளிகள் ஒரு பேருந்தை வெடி வைத்து தகர்த்ததில் அதன் ஓட்டுனர் உட்பட 5 மாவட்ட ரிசர்வ் படை போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர் என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

சத்தீஸ்கரின் நாரயண்பூர் மாவட்டத்தில், கன்ஹார் காவ்ன்-க்கும் கதேனர் கிராமத்துக்கும் இடையே, தவுதாய் போலீஸ் நிலைய எல்லைக்குள் பேருந்து சென்று கொண்டிருந்த போது கண்ணி வெடித்துள்ளது. அதில் பேருந்தில் சென்று கொண்டிருந்த சுமார் 20 சத்தீஸ்கர் “மாவட்ட ரிசர்வ் படை” போலீசாரில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 13 பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்தி தெரிவிக்கிறது.

மாவட்ட ரிசர்வ் படையினர், மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள நாராயண்பூர் நகரத்தில், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர் என்று பஸ்தர் பகுதியின் தலைமை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

அபுஜ்மத் அடர்ந்த காடுகள் சூழ்ந்த, புதிதாக போடப்பட்டுக் கொண்டிருக்கும் பஸ்தூர்-பல்லி சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்த போது, நக்சல் போராளிகள் கண்ணிவெடியை வெடிக்கச் செய்துள்ளனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மாவட்ட ரிசர்வ் படை என்பது, சத்தீஸ்கரின் பஸ்தர் பிரிவில், நக்சல் போராளிகளை எதிர்ப்பதற்கான முன்னணி போலீஸ் பிரிவு என்றும் அதில் உள்ளூர் இளைஞர்களும், சரணடைந்த மாவோயிஸ்டுகளும் பணிபுரிகின்றனர் என்று தி ஹிந்துவில் வெளியான பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

சென்ற ஆண்டு மார்ச் 21-ம் தேதி இந்தப் பகுதியின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் போராளிகள் தாக்கியதில் 12 மாவட்ட ரிசர்வ் படையினர் உட்பட 17 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் என்பதை தி ஹிந்து நினைவூட்டியுள்ளது.

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் இந்தத் தாக்குதலை கண்டனம் செய்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. “பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்