Aran Sei

கார்ப்பரேட் நன்கொடை வசூலில் 698 கோடி பெற்று பாஜக முதலிடம்

Credits The Hindu

பெருநிறுவனங்களிடம் இருந்து அதிகப்படியான நன்கொடைகள் வாங்கிய அரசியல் கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது.

2018-2019 நிதியாண்டில் மட்டும் 5 தேசிய கட்சிகள் பெருநிறுவனங்களிடமிருந்து 876.10 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் 20,000 ரூபாய்க்கு அதிகமாக பெற்றுள்ள நன்கொடைகள் இந்த அறிக்கைக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி 2004-ம் ஆண்டு முதலே 20,000 ரூபாய்க்கு அதிகமாக நன்கொடை பெறவில்லை என்று கூறியுள்ளது. அதிகபட்சமாக, பாஜக 1573 கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து 698 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 122.5 கோடியும், தேசியவாத காங்கிரஸ் 11.345 கோடியும் நிறுவனங்களிடம் நன்கொடையாகப் பெற்றுள்ளன. 2018-2019 இடைப்பட்ட காலத்தில் நன்கொடை எதுவும் பெறவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடையில் 92% இதுபோன்ற அறியப்படும் நிறுவனங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகளே. 2004-2012 இடைப்பட்ட காலத்தில் 378.89 கோடியாக ரூபாயாக இருந்த அரசியல் கட்சிகள் பெரும் நன்கொடைத் தொகை  தற்போது 131% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Credits ADR

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் 573.18 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருந்ததாகவும், அதன் பிறகு அதிகபட்சமாக நன்கொடை பெற்றிருப்பது 2018-2019 நிதியாண்டிலே என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை என்ற அமைப்பிடமிருந்து அதிகபட்ச நன்கொடை தொகையைப் பெற்றுள்ளன. ஒரே ஆண்டில் இந்த அமைப்பு மூன்று கட்சிகளுக்கும் முறையே மூன்று முறை நன்கொடை அளித்துள்ளது.

உற்பத்தித் துறை மற்றும் கட்டுமானத் துறையிலிருந்தும் பெருமளவு நன்கொடை பெறப்பட்டுள்ளது. நன்கொடைப் படிவத்தில் முகவரி மற்றும் விவரங்கள் குறிப்பிடப்படாமல், 319 நிறுவனங்களிடம் 31.42 கோடி ரூபாயை அரசியல் கட்சிகள் நன்கொடையாக பெற்றுள்ளன.

நிரந்தர கணக்கு எண் (PAN) இல்லாமல் 13.57 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்பட்டுள்ளது. முகவரி, நிரந்தர கணக்கு எண் இரண்டுமே இல்லாமல் 13.364 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

Credits ADR

2013 செப்டம்பர் 13-ம் தேதி உச்சநீதி மன்றம் அளித்துள்ள உத்தரவுபடி வேட்பாளர் படிவத்திலும், 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்ற கணக்குகள் குறித்து அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் 24A படிவத்திலும், எந்தப் பகுதியும் நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் நன்கொடையாளர்கள் நிரந்தர கணக்கு எண் குறிப்பிடுவது கட்டாயம் என்றும் கூறியுள்ளது.

அக்டோபர் 31-ம் தேதிக்குள் நன்கொடை அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்காத கட்சிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு, வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கக்கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்