உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிராக இயற்றபட்ட புதிய சட்டத்தின் கீழ், பரேலியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று (டிசம்பர் 2) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்.
லவ் ஜிகாத் என்ற பெயரில் திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச அமைச்சரவை இயற்றிய சட்டத்திற்குக் கடந்த மாதம் 27 ஆம் தேதி, அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஒப்புதல் அளித்தார்.
உத்தரப்பிரதேசம் : திருமணத்திற்காக மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.
சமீபத்தில், கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக ஓவைஸ் அகமத் மீது பரேலி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. உத்தரப்பிரதேசச் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு பதிவு செய்யப்படும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு
ஷரிஃப்நகரைச் சேர்ந்த டிக்காராம், தனது மகளுடன் கல்வி நிலையங்களில் நட்பாகப் பழகி வந்த ஓவைஸ் அகமது திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன் மகளைக் கவர்ந்து, ஏமாற்றியுள்ளார் என்றும் தற்போது மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார் என்றும் பரேலிக் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
இதற்கு, உத்தரப் பிரதேசச் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் (2020) கீழ் பரேலி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 504 (அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது) மற்றும் 506 ( குற்றங்கருதி மிரட்டுவது) -ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
`லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன?
திருமணம்செய்துகொள்ள அந்தப் பெண் மதம் மாற வேண்டும் என்று ஓவைஸ் கட்டாயப்படுத்தியதாகக் காவல்துறை அதிகாரி சிங் கூறியதாக தி இந்து குறிப்பிட்டிருந்தது.
மேலும், ஓவைஸ் அகமது தப்பித்துச் சென்று விட்டதாகவும் இவரைத் தேடும் பணியில் காவல்துறை இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 2) இந்த வழக்கில் தேடப்படுபவரான ஓவைஸ் அகமதைக் கைது செய்துள்ளதாக உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை
உத்தரப்பிரதேசச் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபருக்குப் பிணை வழங்க மறுத்துள்ளது. மேலும் மதமாற்றம் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுப் போலியாகத் திருமணம் செய்வது, கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி அவர்கள் மீது அதிகாரம் செலுத்தி மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனக் கூறுகிறது.
இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.15,000 அபராதத்துடன் ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
அந்தப் பெண்ணின் சகோதரரான கேசர்பால் ரத்தோர், இந்த வழக்கு 2019 ஆண்டே முடிந்துவிட்டதாகவும், அவரது சகோதரியும் இந்த ஆண்டு மே மாதம் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் தி இந்து விடம் கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் காவல்துறையை அணுகவில்லை. சமீபத்தில் காவல்துறையினர்தான் எங்கள் வீட்டிற்கு வந்து, அந்த வழக்கைப் பற்றிக் கேட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய என் தந்தையைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகர், திருமணத்திற்காக மதமாற்றத் தடுப்புச் சட்டம், மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பின்னுக்குத் தள்ளும் செயல் என்று விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.