இனி பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடுகள் முறையாக அனுமதி பெற்ற பிறகே அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை 79 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கும் முடிவை மே மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொருளாதார மீட்பு தொகுப்பு அறிவிப்பின் போது அறிவித்தார்
இந்தியாவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டது..
பாதுகாப்பு துறையில் எந்தவித முன் அனுமதி இன்றி நேரடியாக முதலீடு செய்யலாம் என்று ஜூலை 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியது.
அரசு வழியாக வருகின்ற அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் முன்கூட்டியே அந்ததந்த துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், தனி வழியாக வருகின்ற முதலீடுகள் ரிசர்வ் வங்கியிடம் முதலீடு செய்த பிறகு தகவலை தெரிவித்தால் போதுமானது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், “பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடுகள் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆழ்ந்து ஆராயப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.
“நாட்டு பாதுகாப்பை பாதிக்கின்றதோ இல்லையோ பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடுகளை சீராய்வு செய்வதற்கு அரசுக்கு உரிமையுள்ளது” என்றும் அந்த குறிப்பு திட்டவட்டமாக கூறுகிறது.
ஏன் இந்த புதிய நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டது என்று அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. இராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதை கண்காணிக்கவே இந்த நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று மிண்ட் நாளேடு குறிப்பிடுகிறது.
இந்தியாவில் சீன முதலீடுகள் பெரும்பாலும் நிதிசார் தொழில்நுட்பங்களிலும் மிகக் குறைந்தளவில் உள்கட்டுமான வசதிகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. சீனாவுடனான வர்த்தக பற்றாகுறையை குறைப்பதற்கு சீன நிறுவனங்கள் முதலீடுகளை ஈர்க்கவே இந்தியா முயன்று வந்தது. அண்மை மாதங்களில் இந்த உத்தி மாறியிருப்பதாக மிண்ட் நாளேடு குறிப்பிடுகிறது.
”இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடுகள் வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை இராணுவ தளவாட உற்பத்தியில் தற்சார்பை மேம்படுத்தும்” என்று வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
National security has always been the top priority of Govt. under the leadership of PM @NarendraModi ji.
Amendment in FDI Policy in defence sector will boost 'Make in India' programme & armed forces will get much needed technological advancement.
— Piyush Goyal (@PiyushGoyal) September 18, 2020
”முதலீடுகள் அனைத்தையும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன்” என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சீன ஆய்வு துறையின் பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டபள்ளி கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.