Aran Sei

ஃபாசிஸ்ட் கட்சிக்குத் தடை – கிரீஸ் மக்கள் கொண்டாட்டம்

கோல்டன் டான் என்ற ஃபாசிஸ்ட் கட்சியை, சட்டவிரோத அமைப்பு என்று கிரீஸ் நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோல்டன் டான் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பை அறிந்துகொள்ள, ஏதென்ஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நீதிமன்றத்தின் வாசலில் குழுமியிருந்தனர்.

தீர்ப்பு வெளியானதும், மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மக்கள், உற்சாக மிகுதியால் காவல்துறை வாகனங்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசியதாகவும், அதைத்தொடர்ந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காவல்துறையினர் கூட்டத்தை கலைத்ததாக ‘தி கார்டியன்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின்போது அந்நாடு, பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய யூனியனால் வற்புறுத்தப்பட்டது.

இந்த சமயம் கிரீஸ் அரசு பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை குறைத்தது. இதனால், அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வலதுசாரி ஃபாசிஸ்ட் அமைப்பான கோல்டன் டான் வளர்ச்சியடைந்ததாக ‘தி கார்டியன்’ கூறுகிறது.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோல்டன் டான் கட்சி, கிரீஸ் நாடாளுமன்றத்தில் 21 இடங்களை கைப்பற்றி மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ச்சியடைந்தது. அதன் பிறகே, கோல்டன் டான் கட்சியினரின் வன்முறை அதிகரித்ததாக ‘தி கார்டியன்’ குறிப்பிடுகிறது.

கோல்டன் டான் கட்சியினர் அகதிகள், கம்யூனிஸ்ட்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், 2013ஆம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த பழ வியாபாரி சஜாத் லுக்மேன் என்பவர் கோல்டன் டான் கட்சி உறுப்பினரால் கொல்லப்பட்டதாக ‘தி கார்டியன்’ கூறுகிறது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம், பாசிஸ்ட்டுகளுக்கு எதிரான ‘ராப்’ பாடகர் ஃபைசாஸ் குத்திக்கொல்லப்பட்டது கிரீசில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கோல்டன் டானை சேர்ந்த மூத்த உறுப்பினர் ஜியோர்கோஸ் ரவுபாகியோஸ் என்பவர் கொலை செய்தை ஒப்புக்கொண்டதாக ‘கார்டியன்’ தெரிவிக்கிறது.

2012ஆம் ஆண்டு எகிப்தை சேர்ந்த 4 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி உட்பட, கோல்டன் டான் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை நீதிமன்றம் தனித்தனியாக விசாரித்தது.

கோல்டன் டான் அமைப்பினர் தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், இது அரசியல் பழிவாங்கள் நடடிவக்கை என்றும் கூறினர். விசாரணையின்போது, ஹிட்லர் ஆதரவாளரும், அமைப்பின் தலைவருமான மைக்லோஐகோஸ், கோல்டன் டான் ஒரு தேசபக்த அமைப்பு என்று கூறியதுடன், தாக்குதல்களுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதாக ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு ஆதாரங்களுடன், அப்ரூவராக மாறிய கோல்டன் டான் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ஐந்துபேரின் சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, குற்றச் செயலை செய்ய வழிநடத்திய கோல்டன் டான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள மேலும் சில குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், கூடுதல் ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று ‘கார்டியன்’ கூறுகிறது.

அத்துடன், கோல்டன் டான் கட்சி ‘சட்டத்திற்குப் புறம்பான அமைப்பு’ என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை அறிந்துகொள்வதற்காக, இடதுசாரியான கிரீஸ் நாட்டின் முன்னாள் அதிபர் அலெக்சி சிப்ராசும் நீதிமன்ற வாயிலில் மக்களோடு மக்களாக காத்திருந்தார். தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”பல ஆண்டுகளாக கீரிஸ் சமூகத்தில் வெறுப்பையும், நச்சையும் கலந்தவர்கள், கொடூர தாக்குதல்களை நடத்தியவர்கள் இன்று தண்டனை பெற்றுள்ளதாக கூறினார்” கூறினார்.

“இந்த தீர்ப்பு, கிரீசின் எல்லையையும் தாண்டி, அகதிகளுக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான வலதுசாரிகள் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று ஆம்னஸ்டி இண்டர் நேஷனல் அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் நில்ஸ் முயிஸ்னிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நாஜிகளுக்கு எதிராக நியூரம்பர்க்கில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, ஃபாசிஸ்ட்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிக முக்கியமான விசாரணையாக இது பார்க்கப்படுகிறது.

இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று “யூத மக்களின் மத்திய கழகம்” கருத்து தெரிவித்துள்ளது.

ஹிட்லரின் ஆக்கிரமிப்பின் போது, கிரீசில் வாழ்ந்த ஏறக்குறைய அனைத்து யூத மக்களும் ஜெர்மன் ராணுவத்தால் விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்