Aran Sei

காஷ்மீர் : உரிமையை மீட்க ஒன்றுகூடும் கட்சிகள்

குப்கர் தீர்மானத்தில் பங்கேற்ற கட்சிகளின் கூட்டத்தை, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தன் வீட்டில் இன்று கூட்ட உள்ளார். ம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவைத் திரும்பப் பெறுவதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்கும் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு&காஷ்மீர் மாநிலம், ஜம்மு&காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 4-ம் தேதி, தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லாவின் குப்கர் இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ’குப்கர் தீர்மானம்’ வெளியிடப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து வகையான தாக்குதல்களையும் ஒன்றாக இணைந்து தடுக்கவும் ஜம்மு-காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், சுயாட்சி மற்றும் சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாக்கும் முயற்சிகளையும் உடனே எடுக்க வேண்டும் போன்ற திட்டங்கள் குப்கர் தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தது.

அன்றைய இரவே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் முன்னாள் முதல்வர்களான மெஹ்பூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூவரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகிய இருவரும் வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹ்பூபா முப்தியின் வீட்டுச் சிறை தொடர்ந்தது.

மெஹ்பூபா முப்தி (நன்றி : BCC)

இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக வீட்டுச் சிறையில் இருந்த மெஹ்பூபா முப்தி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விடுவிக்கப்பட்டார். காஷ்மீர் தொடர்பான வழக்கை உச்சநீதி மன்ற விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடக்கவிருக்கும் நிலையில் மெஹ்பூபா முப்தி விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட பின் மெஹ்பூபா, 1.23 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பேசி வெளியிட்டார். அதில், “கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, கறுப்பு நாள் அன்று எடுக்கப்பட்ட முடிவால் எப்போதும் என் இதயமும் ஆன்மாவும் வலித்துக்கொண்டிருக்கிறது என்பதைக் கூறிக்கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் இதே உணர்வு இருக்கும் என்பதை உணர்கிறேன். அன்று நடந்த அவமானத்தை நாம் யாரும் மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்பிற்கு எதிராக ஜனநாயக விரோதமாக, டெல்லி நீதிமன்றம் நம்மிடமிருந்து பறித்த அனைத்தையும் திரும்பப்பெறுவதற்கு இப்போது நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

குப்கர் தீர்மானத்தில் பங்கேற்ற கட்சிகளின் கூட்டத்தை, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தன் வீட்டில் இன்று கூட்ட உள்ளார். ம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவைத் திரும்பப் பெறுவதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்கும் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தைக் குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பேசிய போது ”வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மெஹ்பூபா சாஹிபாவிடம் நானும் என் அப்பாவும் அவரின் உடல் நலன் குறித்து விசாரித்தோம். நாளை (வியாழக்கிழமை) மதியம் குப்கர் தீர்மானத்தில் கையொப்பம் இடுவதற்கான ஃப்ரூக் சாஹிப்பின் அழைப்பை மெஹ்பூபா சாஹிபா ஏற்றுக்கொண்டார்.” என்று கூறியதாக ‘என்டிடிவி’ தளம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்