விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், வரும் ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தன்று, டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருக்கும், டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பேர் பதிவு செய்துள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு – ராணுவ அணிவகுப்பிற்கு இணையாக விவசாயிகள் நடத்த முடிவு
விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால், ஜனவரி 26-ம் தேதி டெல்லிக்குள் பேரணி நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.
குடியரசு தினத்தன்று நடத்தத் திட்டமிட்டிருக்கும் இந்த மிகப்பெரிய போராட்டத்துக்கான தயாரிப்பாக, விவசாய சங்கங்கள் பஞ்சாப் முழுவதும் உள்ள கிராமங்களில் அணி திரட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.
கீர்த்தி கிசான் யூனியன், பஞ்சாப்-ன் துணைத் தலைவர் ரஜீந்தர் சிங், “நாங்கள் சென்ற வெள்ளிக் கிழமை இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். அதற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. குடியரசு தினத்துக்கு முன்பு சிங்கு வரவிருக்கும் தன்னார்வலர்கள் அனைவரது விபரங்களையும் நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
பஞ்சாபிலிருந்து இலட்சக்கணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி கிசான் யூனியன் நடத்திய இயக்கத்தில் முதல் நாளில் 3,500 பேர் இணைந்துள்ளனர்.
’விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு இன்று ட்ரைலர்’ – டெல்லி நெடுஞ்சாலைகளில் குவிந்த விவசாயிகள்
நியூசிலாந்திலிருந்து வந்திருக்கும் ஐடி ஊழியர் ஜதிந்தர் சிங், “குறைந்தபட்சம் 1 லட்சம் டிராக்டர் டிராலிகள் கலந்து கொள்ளப் போவதாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், இன்னும் பலர் ஆர்வமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் இணைபவர்களின் விபரங்களை ஒரு டேட்டாபேஸ்-ல் பராமரிப்பது இதை ஒருங்கிணைப்பதற்கு உதவுகிறது” என்று கூறியுள்ளார். அவர், போராட்டத்தின் பாதுகாப்புக் குழுவில் இணைந்துள்ளார்.
குடியரசு தினத்தில் ‘டிராக்டர் அணிவகுப்பு’ போராட்டம் – அனைவரும் ஆதரவளிக்க விவசாயிகள் கோரிக்கை
மகர சங்கராந்தி, லோஹ்ரி பண்டிகைகளுக்குப் பிறகு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று விவசாய சங்கங்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்ற வாரம், பல்வேறு போராட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியின் கிழக்கு புறநகர் துரித சாலையிலும், மேற்கு புறநகர் துரித சாலையிலும் டிராக்டர் பேரணி நடத்தி ஒத்திகை பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.