“எங்களுக்கு கமிட்டி தேவையில்லை. அரசாங்கத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியாக விவாதிக்கத் தேவையில்லை. மூன்று கருப்புச் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று, நேற்று டெல்லி சிங்கு எல்லையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கிராந்திகாரி கிசான் யூனியன் தலைவர் தர்ஷன் பால் கூறியுள்ளார்.
முன்னதாக நடந்த விவசாய மற்றும் பொருளாதார நிபுணர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில், கிராமப் புற மற்றும் விவசாய பிரச்சனைகளில் நிபுணரான மூத்த பத்திரிகையாளர் பி சாய்நாத், விவசாயிகள் பிரச்சனையில் “அரசு கமிட்டி மூலம் சாகடிக்கும் உத்தியை பின்பற்றுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்
விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக இதற்கு முன்பு போடப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை என்று கூறிய, பி சாய்நாத். “எம் எஸ் சுவாமிநாதன் கமிஷன் தயாரித்த ஆறு பாகங்களில் வெளியிடப்பட்ட 5 அறிக்கைகள் மீது நாடாளுமன்றத்தில் ஒரு நாள் கூட விவாதம் நடத்தப்படவில்லை.” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
“இந்த கருப்புச் சட்டங்களை ரத்து செய்வதற்கு அரசு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டட்டும், அதுவரையில் எங்கள் போராட்டம் தொடரும்” என்று விவசாய சங்கத் தலைவர் தர்ஷன் பால் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசின் மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து மூன்று மாதங்களாக போராடி வரும் விவசாயிகள், கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காத நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, “டெல்லி சலோ” என்ற முழக்கத்துடன் தலைநகர் டெல்லிக்கு போராட்டத்தை நகர்த்தினார்கள். பாஜக ஆட்சி செய்யும் ஹரியானா மாநிலத்தில் போலீசின் தடைகளையும் தாக்குதல்களையும் தாண்டி டெல்லி எல்லையை அடைந்தார்கள்.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்காமல் தடுப்பு அரண்களை அமைத்திருப்பதால், லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டு போராடி வருகின்றனர்.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை புராரி மைதானத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் டிசம்பர் 3-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை விவசாயிகள் நிராகரித்த பிறகு, டிசம்பர் 1-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) ஒன்றிய விவசாய அமைச்சர் நரேந்திர தோமாரும், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையில், இந்தச் சட்டங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு அரசு அதிகாரிகள், விவசாயத் துறை நிபுணர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி அமைப்பதாக அரசு முன்வந்திருந்தது. அதை நிராகரித்த விவசாயிகள், மூன்று சட்டங்களையும் ரத்து செய்வது வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
“எங்களைக் குழப்புவதற்காக, இந்த ஷரத்து அந்த ஷரத்து என்று விவாதத்துக்குள் இழுத்து விட அரசு முயற்சித்தது, அந்த உத்தியை புரிந்து கொண்ட நாங்கள் சட்டங்களின் ஒவ்வொரு ஷரத்தையும் பற்றிய எழுத்து பூர்வமான விமர்சனத்தை தயாரித்துள்ளோம், அதன்படி இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டே தீர வேண்டும்” என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.
டிசம்பர் 1-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு “முதலில் பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஹரியானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநில விவசாய சங்கத் தலைவர்களையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களும் அந்த பேச்சுவார்த்தையில் இணைந்தார்கள்” என்று கூறும் தர்ஷன் பால், இனிமேல் ஒன்றிய அரசுடனான அனைத்து பேச்சு வார்த்தைகளும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் தலைவர்களின் கூட்டணியான “சம்யுக்த கிசான் மோர்ச்சா”வின் பிரதிநிதிகளுடனே நடத்தப்பட வேண்டும் என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.
’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்
விவசாயிகள் போராட்டங்கள் காரணமாக டெல்லிக்குள் வருவதற்கும் டெல்லியிலிருந்து போவதற்குமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி தெரிவிக்கிறது. சிங்கு, திக்ரி, காசியாபாத், ஜரோடா, ஜதிகாரா மற்றும் அவுசாந்தி எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் டெல்லி – நோய்டா – டெல்லி துரித சாலையையும் மூடுவதற்கு அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
லம்பூர் மற்றும் சில்லா எல்லைகள் பகுதியளவு திறந்துள்ளன. காலிந்தி குஞ்ச், தன்சா, தவுராலா, கபஷெரா, தந்தஷெரா மற்றும் பாலம் விகார் பகுதிகளில் இன்னும் போக்குவரத்து இயங்கி வருகிறது.
இன்று திட்டமிட்டபடி அரசுக்கும் விவசாய சங்க பிரநிதிகளுக்கும் இடையே அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைகளில், ஒரு சில பிரநிதிகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள், நாடு முழுவதும் உள்ள 400 விவசாய சங்க பிரதிநிதிகளையும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.
“எங்களது எதிர்ப்புகளை எழுத்து வடிவில் கொடுப்போம். ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள், நான்கு நாட்கள் கூட பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். ஆனால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாதது வரை இங்கும், நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்று விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நெடுஞ்சாலைகளை மறித்து தனியாக போராட்டம் நடத்தி வரும் பாரதிய கிசான் யூனியன் – திகாயத் குழு, நேற்று ஒன்றிய அமைச்சர்களுடன் தனியாக பேச்சு நடத்தியது. இப்போது, அந்த அமைப்பும் பரந்து பட்ட போராட்டத்தில் இணைந்துள்ளது.
“வெவ்வேறு குழுக்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் ஒன்றிய அரசு விவசாயிகளின் இயக்கத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. இது பஞ்சாப் விவசாயிகளின் போராட்டமாக மட்டும் இனிமேலும் இல்லை. சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற தலைமையின் கீழ் நாடு முழுவதற்குமான இயக்கமாக ஒன்றிணைந்து போராடுகிறோம்” என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இழுத்தடித்தால் “டெல்லியின் மற்ற எல்லைகளையும் மறித்து, டெல்லியை திணறடிப்போம்” என்றும் விவசாய சங்கத் தலைவர் கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.
“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில், பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறு செய்த ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் வீட்டுக்கு முன் உள்ள தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்ற போது போலீஸ் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது. பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பரிந்தர் தில்லன் மற்றும் பலர் சண்டிகர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாரி நிறுவனங்களின் தலைமை சங்கமான அகில இந்திய வாகன போக்குவரத்து காங்கிரஸ் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ம் தேதி முதல் வட இந்தியாவில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் வேலை நிறுத்தம் நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும் என்று சங்கத்தின் தலைவர் குல்தரன் சிங் அத்வால் தி ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 7-ம் தேதி, விவசாயிகளுக்கு ஆதரவான விளையாட்டு வீரர்களும் முன்னாள் இராணுவ வீரர்களும் தமது விருதுகளையும், பதக்கங்களையும் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பவுள்ளார்கள்.
புதிய சட்டங்கள் விவசாயிகளை பாதித்து பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயம் அளிப்பதற்கானவை என்று கூறும் ஒடிசா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயத் தலைவர்கள், டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும், முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகிய தொழிலதிபர்களின் கொடும்பாவிகளை, பிரதமர் நரேந்திர மோடியின் கொடும்பாவியுடன் எரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.