விவசாய சட்டங்களை நீக்கக்கோரி நடந்து வரும் போராட்டங்கள் குறித்து அவதூறு பரப்புவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் பாஜக தலைவர் ராம் மாதவ் ஆகியோருக்கு, பஞ்சாப் விவசாயிகள் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மூவரும், தாங்கள் கூறிய அவதூறு கருத்துகளை திரும்பப் பெற்று, அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸில் விவசாயிகள் கோரியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸைச் சேர்ந்த விவசாயி ஜாஸ்கரன் சிங் பந்தேஸா, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “ விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு சக்திகள் புகுந்துவிட்டன. இந்தப் போராட்டத்தால் விவசாயிகளுக்கு பலன் இல்லை. காலிஸ்தான், ஷர்ஜீல் இமாம் போன்ற அமைப்புகள்தான் நடத்துகின்றன என்று கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.” என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளுதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் மீது அவதூறு – கங்கனா ராணாவத்தின் வாயை மூட வைத்த தில்ஜீத் – வீடியோ
மேலும், பல அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் நல்ல எண்ணத்துடனோ பொறுப்புடனோ வெளியிடப்படவில்லை. மாறாக, அவநம்பிக்கையுடனும், சொந்த நலன்களுக்காகவும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளை இழிவுபடுத்துவதற்குமே வெளியிடப்படுகிறது என்றும் நோட்டிஸ் விமர்சித்துள்ளது.
இந்த தேசத்துக்கே விவசாயிகள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக மாற்றி உணவு வழங்கிவருகிறோம் என்றும் நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் இருக்கிறார்கள், பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக விவசாயத்துறை இருக்கும் போது விவசாயிகள் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் கோரியுள்ளன.
உரிமைக்கு போராடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா – பாஜகவிற்கு வலுக்கும் கண்டனம்
ஜலந்தரைச் சேர்ந்த விவசாயி ராம்னீக் சிங் ராந்தவா , குஜராத் மாநில துணை முதலவர் நிதின் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “ விவசாயிகள் எனும் பெயரில் சமூகவிரோத சக்திகள், தீவிரவாதிகள், காலிஸ்தானிகள், கம்யூனிஸ்ட்கள், சீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விவசாயிகளிடம் பீட்சா, பக்கோடி போன்ற உணவுகள் வெளிநாட்டு சக்திகள் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன. லட்சக்கணக்கான ரூபாய்களை போராட்டக்காரர்களுக்கு இவர்கள் வழங்குகிறார்கள் என்று நிதின் படேல் தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற இந்தப் பேச்சுக்கு நிதின் படேல் மன்னிப்புக் கோர வேண்டும்.” என்று ராம்னீக் சிங் தெரிவித்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
போராடும் விவசாயிகளை தேச விரோதிகள் என்பதா – பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்
சங்ரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சித்து , பாஜக தலைவர் ராம் மாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராம் மாதவ் தனது ட்விட்டர் பதிவில் விவசாயிகள்போராட்டம் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டிருந்ததால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாஜக தலைவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது தேவையான சட்ட உதவிகள் இலவசமாக வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் ராகவ் சத்தா தெரிவித்துள்ளதாக தி இந்துவின் செய்தி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.