Aran Sei

சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றிய விவசாயிகள் – தொடரும் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், நாடு முழுவதும் 165 இடங்களில் சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளனர். முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களைக் கட்டணமின்றிச் செல்ல அனுமதியளித்துள்ளனர்.

நேற்று (டிசம்பர் 12) மாலை, ராஜஸ்தானில் இருந்து ஒரு விவசாயிகள் குழு ஹரியானாவின் ரேவாரியில் உள்ள தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையைத் கைப்பற்ற முயன்றுள்ளனர் என்றும் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இன்று (டிசம்பர் 13) காலை தில்லியை நோக்கிய பேரணிக்குச் செல்வதற்காக ராஜஸ்தான் – தில்லி எல்லையில் கூடியுள்ளனர் என்றும் தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், “அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம். ஆனால் இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, நாங்கள் மற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கத் தொடங்க மாட்டோம்.” என்று விவசாயிகள் சங்கர்ஷ் குழுவின் தலைவர் கன்வல்பிரீத் சிங் பன்னு, சிங்கு எல்லையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நாளை (டிசம்பர் 14) ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள் என்று தி இந்து தெரிவித்துள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சபை வழங்கிய தகவல்களின்படி, மாநிலம் முழுவதும் உள்ள 450 சுங்கச்சாவடிகளில் 165 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை, புதிய விவசாயச் சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னர், அக்டோபர் முதல் அனைத்துச் சுங்கச் சாவடிகளும் இலவசமாகத்தான் உள்ளன. ஹரியானாவில், விவசாயிகள் 20 இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் விவசாயிகள், பாஜக-வை எதிர்த்துக் கோஷங்களை எழுப்பியும், உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தால் நடத்தப்படும் பெட்ரோல் பம்புகள் மற்றும் மால்களிலும், விவசாயிகள் மறியல் செய்துள்ளனர் என்று தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.

“ஹரியானாவில் உள்ள அனைத்துச் சுங்கச் சாவடிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அம்பாலா-ஹிசார் நெடுஞ்சாலையில் காலை முதலே விவசாயிகள், சுங்கச் சாவடிகளில் கூடினர். தவிர, ஹிசார் மாவட்டத்தில் உள்ள தில்லி, ராஜ்கர், சிர்சா மற்றும் சண்டிகர் செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நாங்கள் மறியல் செய்தோம்.” என்று ஹரியானா பாரதிய விவசாயிகள் சங்கத்தின் (டிக்கைட்) தலைவர் ரத்தன் மான் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், “சண்டிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாலான சுங்கச் சாவடிகள், பஞ்ச்குலா-சஹரன்பூர் நெடுஞ்சாலையில் பால்-மஜ்ரா டோல் சுங்கச் சாவடிகள் மற்றும் அசாந்த்-கர்னல் நெடுஞ்சாலையில் குல்லார்பூர் டோல் சுங்கச் சாவடிகள் ஆகியவற்றில் பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்