விவசாய சீர்திருத்த சட்டங்களை ரத்து செய்யவும், மின்சார மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் நடத்தும் டெல்லி முற்றுகை போராட்டம் தொடர்கிறது. இது தொடர்பாக, 5 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று ஒன்றிய அரசின் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமாரும், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள், விவசாயத் துறை நிபுணர்கள், மற்றும் விவசாய தலைவர்களைக் கொண்ட ஒரு உயர்மட்ட கமிட்டியை அமைப்பது என்ற அரசின் பரிந்துரையை விவசாயத் தலைவர்கள் நிராகரித்து விட்டனர். புதிதாக இயற்றப்பட்ட சட்டங்களை அரசாங்கம் ரத்து செய்வது வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
“எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; அதனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – விவசாயிகள்
கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் ஒருவரான சந்தா சிங், “விவசாய சட்டங்களுக்கு எதிரான நமது இயக்கம் தொடரும், அரசாங்கத்திடமிருந்து ஏதோ ஒன்றை நிச்சயமாக திரும்பப் பெறுவோம், அது துப்பாக்கிக் குண்டுகளாக இருந்தாலும் சரி, அமைதியான தீர்வாக இருந்தாலும் சரி.” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
“புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளுக்கு ‘மரண சாசனம்’ என்று ஒரு விவசாய பிரதிநிதி பேச்சுவார்த்தையின் போது கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சு வார்த்தை நாளை தொடரும் என்று அரசும், விவசாய தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் ஒரு சிறிய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியதாகவும், விவசாய தலைவர்கள் அதை நிராகரித்து, கூட்டுத்துவமாகத்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் என்று தெரிவித்து விட்டிருக்கின்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுடன் டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி, காசிபூர் பகுதிகளில் போராடுவதற்காக கூடியுள்ளனர் என்றும், செவ்வாய்க் கிழமை நோய்டா, டெல்லி எல்லையிலும் நூற்றுக் கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர் என்றும் இந்தியா டுடே தெரிவிக்கிறது.
மதியம் 35 விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு விவசாய அமைச்சகத்தில் பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) பிரதிநிதிகளுடன் இன்னொரு சுற்று பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அதில் ஹரியானா, உத்தர பிரதேசம், டெல்லி, உத்தர்காண்ட் பிரநிதிகள் கலந்து கொண்டனர் என்றும் இந்தியா டுடே தெரிவிக்கிறது.
அரசு தனியாக பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் விவசாய சங்கங்களின் ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பதாக விவசாயத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாகத் தொடர் போராட்டம் -தமிழக இடது சாரி கட்சிகள்
ஹரியானாவில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சி குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடரும் என்று அரசு எழுத்துபூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. மாநிலத்தின் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் மாநிலத்தின் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார்.
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், டெல்லி-காசிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளுடன் இணைந்து கொண்டார். நேற்று மாலை ஷாஹீன் பாக் போராட்டத்தின் முன்னணியில் நின்ற 80 வயதான பில்கிஸ் பானு, சிங்கு எல்லையில் விவசாயிகளுடன் இணைவதற்கு வந்த போது போலீசால் திருப்பி அனுப்பப்பட்டார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.