Aran Sei

“உங்க சாப்பாடும் வேண்டாம், திருத்தங்களும் வேண்டாம், கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – போராடும் விவசாயிகள்

டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள சிங்குவில் ஆயுதப் படைகள் குவிப்பு - Image Credit : dnaindia.com

ன்றிய அரசின் மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாய சங்கத் தலைவர்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இடையே நேற்று நடந்த 7 மணி நேர பேச்சுவார்த்தை, தீர்வு எட்டப்படாமல் முடிந்தது.

நேற்று நடந்த பேச்சு வார்த்தைகளில் விவசாயிகளின் பிரதிநிதிகள் புதிய விவசாய சட்டங்களின் குறைபாடுகள் பற்றி 39 கருத்துக்களை அடங்கிய ஆவணத்தை முன் வைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அரசாங்கம் தனது கருத்துக்களை கூறியது.

விவசாயிகள் எதிர்க்கும் விவசாய சட்டங்களில் 8 திருத்தங்களைக் கொண்டு வருவதாக அமைச்சர்கள் சொன்னதை நிராகரித்த விவசாயிகள், மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கையில் உறுதியாக நிற்கின்றனர் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா - Image Credit : dnaindia.com
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா – Image Credit : dnaindia.com

குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சார மானியத்தை பாதிக்கக் கூடிய மின்சார மசோதா 2020-ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

இந்தச் சட்டங்களுக்கான தமது எதிர்ப்பு அடிப்படையானது என்றும், சில மாற்றங்களால் பிரச்சனையை சரி செய்து விட முடியாது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். “ஒரு சட்டம் தனது நோக்கங்களில் தவறாக இருக்கும் போது, அதன் ஷரத்துகளும் தவறாகத்தான் இருக்கும். பிரச்சனைகளின் பட்டியல் அவ்வளவு நீளமாக இருப்பதால், சட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பதில் எந்த பலனும் இல்லை. ஒரு மோசமான சட்டம் இன்னும் மோசமாகத்தான் போகும்” என்று மகிளா கிசான் அதிகார் மஞ்ச்-ஐச் சேர்ந்த கவிதா குருகந்தி தெரிவித்துள்ளார்.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

நேற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மூன்று ஒன்றிய அமைச்சர்களுடன் சேர்ந்து உணவு உண்ண மறுத்து விட்டனர் என்று தெரிவிக்கிறது என்டிடிவி. உணவு இடைவேளையின் போது, அரசு கொடுத்த உணவை மறுத்து விட்ட விவசாய தலைவர்கள், அருகாமையில் உள்ள குருத்வாராவில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை உண்டனர்.

அரசு அளித்த உணவை மறுத்து விட்ட விவசாயிகள் - Image Credit : ndtv.comஅரசு அளித்த உணவை மறுத்து விட்ட விவசாயிகள் - Image Credit : ndtv.com

அரசின் உணவை மறுத்த விவசாயிகள் – சுயமரியாதையின் அடையாளம் என பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி

இந்தப் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, போராட்டங்களை ஒருங்கிணைக்கும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, வெள்ளிக் கிழமை காலை 11 மணிக்கு சிங்கு எல்லையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு மாநில விவசாய சங்கத் தலைவர்கள்

பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 5-ம் தேதி தொடரும் என்று அரசு தெரிவித்திருந்தாலும், “சட்டத்தை ரத்து செய்வீர்களா என்று நாங்கள் அரசிடம் நாளைக்குக் கேட்போம், அவர்கள் மறுத்து விட்டால், டிசம்பர் 5 கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்” என்று பாரதிய கிசான் யூனியன் (தகவுண்டா)வின் பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் கூறியுள்ளார்.

கமிட்டி போட்டு சாகடிக்க முயற்சி, “கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

“எங்கள் தரப்பிலிருந்து விவாதங்கள் முடிந்து விட்டன. இன்றைக்கு அரசு தீர்வு ஒன்றை தரா விட்டால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்று எங்கள் தலைவர்கள் கூறியுள்ளார்கள்” என்று, மகாராஷ்டிரா, குஜராத் விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்,  லோக் சங்கர்ஷ் மோர்ச்சாவின் செயற்குழு உறுப்பினரும் தலைவருமான பிரதிபா ஷிண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

“குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசாங்கம் திருத்தங்கள் பற்றி பேச விரும்புகிறது, விவசாயிகளோ மொத்தமாக சட்டத்தை ரத்து செய்ய கோருகிறார்கள்” என்கிறார் பாரதிய கிசான் யூனியனின் ஒரு பிரிவைச் சேர்ந்த ராகேஷ் திகாயத். மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவர் புதன் கிழமை மாலை பஞ்சாப் விவசாயிகளுடன் கரம் கோர்த்தார் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்

எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்கள்

விவசாயிகளின் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (வளர்த்தல் மற்றும் வசதிசெய்தல்) சட்டம், விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் & பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் மீதான ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம் ஆகிய மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

ஜனநாயகமற்ற முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன: திமுக எம்.பி சண்முகம்

மாநிலங்களவையில் இது தொடர்பான விரிவான விவாதம் நடத்த வேண்டும், மசோதாக்களை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து சர்வாதிகாரமாக மசோதாக்களை நிறைவேற்றியது பாஜக அரசு.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்றிருந்த அகாலி தள் கட்சியைச் சேர்ந்த உணவு பதப்படுத்தல் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். அக்கட்சி பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது.

விவசாயிகள் போராட்டம் : பழமையான கூட்டணி முறிந்தது

மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு அவை செப்டம்பர் 25-ம் தேதி அமலுக்கு வந்தன.

இந்தச் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடுவதை எளிதாக்குவதற்கும், விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வதை ஒழித்துக் கட்டுவதற்கும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை ஊக்குவிப்பதற்கும், அரசு மண்டிகளை இல்லாமல் செய்வதற்கும் வழி வகுக்கும் என்று விவசாயத் துறை நிபுணர்கள் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் – நாடு முழுவதும் தொடரும் போராட்டம்

சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள்

இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேச பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இவற்றுக்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்கினார்கள். இந்த மசோதாக்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி போன்ற பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்டவை என்று குற்றம் சாட்டிய பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் செய்தும், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டும், ரிலையன்ஸ் ஜியோ சேவையை புறக்கணித்தும் போராடினார்கள்.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப் மாநில அரசு இந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக மாநில சட்டங்களை நிறைவேற்றியது. இருப்பினும், ஒன்றிய அரசு இது தொடர்பான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் சென்ற வாரம் முதல் விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராடுவதற்கு முடிவு செய்தார்கள். பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை அடைவதைத் தடுக்கும் வகையில், பாஜக ஆளும் ஹரியான மாநில அரசு சாலைகளில் குழி பறிப்பது, தடுப்பரண்கள் அமைப்பது, விவசாயிகள் மீது தண்ணீரை பீச்சி அடிப்பது, கண்ணீர் புகை குண்டு வீசுவது என்று முயற்சித்தனர். இதை எல்லாம் முறியடித்து இலட்சக்கணக்கான விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி எல்லையை அடைந்தனர்.

“விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்

கடந்த 8 நாட்களாக டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி பகுதிகளில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழான டெல்லி போலீஸ் பெரும் தடுப்பரண்களை அமைத்து விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகள் முகாம் அமைத்து, உணவு சமைத்து சாப்பிட்டு தமது முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்கின்றனர். மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை போராட்டத்தைத் தொடர்வதற்கு தயாராக வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

நேற்று போராட்டத்தில் இணைந்த ராஜஸ்தான் விவசாயிகள் - Image Credit : dnaindia.com
நேற்று போராட்டத்தில் இணைந்த ராஜஸ்தான் விவசாயிகள் – Image Credit : dnaindia.com

பணிந்து வந்த ஒன்றிய அரசு

விவசாயிகள் தமது போராட்டத்தை புராரி மைதானத்துக்கு மாற்றிக் கொண்டால் டிசம்பர் 3-ம் தேதி (நேற்று) பேச்சு வார்த்தை நடத்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பை, புராரி மைதானம் திறந்த வெளி சிறைச்சாலை என்று கூறி, விவசாயிகள் நிராகரித்தனர். ஹரியானாவிலிருந்தும், உத்தர பிரதேசத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி குவிந்தனர்.

இந்நிலையில், இறங்கி வந்த ஒன்றிய அரசு, டிசம்பர் 1-ம் தேதி விவசாய அமைச்சர் நரேந்திர தோமார், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மூலமாக பேச்சுவார்த்தையை தொடங்கினர். பேச்சு வார்த்தை நேற்று தொடர்ந்து நடந்தது.

கடும் குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம் – பேச்சுவார்த்தை நடக்குமா?

நாடு முழுவதும் உள்ள விவசாய பிரதிநிதிகளை இணைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக இருந்து, இப்போது பேச்சு வார்த்தைகளும் ஒருங்கணைப்பும் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் நடந்து வருகின்றன.

டெல்லி முற்றுகையில்

தற்போது சிங்கு, நொய்டா, காசிபூர், சிக்ரி பகுதிகளில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். உத்தர பிரதேசம் – டெல்லி எல்லையில் காசிபூர் பகுதியில் மேற்கு உத்தர பிரதேச விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி - காசிபூர் எல்லையில் மறியல் போராட்டம் - Image Credit : dnaindia.com
டெல்லி – காசிபூர் எல்லையில் மறியல் போராட்டம் – Image Credit : dnaindia.com

டெல்லி – நோய்டா நெடுஞ்சாலையில் சில்லா எல்லையில் டெல்லிக்குள் போகும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. எதிர்த் திசையில் போக்குவரத்து இயங்குகிறது. டெல்லி – நோய்டா – நோய்டா பறக்கும் சாலையில் போக்குவரத்து தொடர்ந்து இயங்குகிறது. டெல்லிக்கு இன்னொரு நுழைபாதையான தேசிய நெடுஞ்சாலை – 9 மூடப்பட்டு விட்டது.

டெல்லி-மீரட் துரித பாதையும் மூடப்பட்டு விட்டதாக என்டிடிவி தெரிவிக்கிறது.

“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்

சிரோமணி அகாலி தள் தலைவரும் பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சருமான பரகாஷ் சிங் பாதல், அரசு விவசாயிகளுக்கு இழைத்த துரோகத்தை முன்னிட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த இந்தியாவின் இரண்டாவது உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருதை திருப்பி கொடுத்திருக்கிறார் என்று என்டிடிவி தெரிவிக்கிறது. பஞ்சாபில் சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற கவிஞர் மோகன்ஜித், எழுத்தாளர் ஜஸ்விந்தர், நாடக ஆசிரியரும், பஞ்சாபி டிரிபியூன் ஆசிரியருமான ஸ்வராஜ்பீர் ஆகியோர் தமது விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்