ஹரியானா மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக, மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்ட பந்தலை போராடும் விவசாயிகள் அடித்து நொறுக்கியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மத்திய அரசு சென்ற செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய 3 விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்கங்களின் தலைமையில் அவற்றை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகின்றன.
டெல்லிக்குள் நுழைய முடியாதவாறு தடுத்து நிறுத்தப்பட்ட, விவசாயிகளின் போராட்டம் கடந்த 50 நாட்களாக டெல்லி எல்லைப் பகுதிகளில் நடந்து வருகிறது.
விவசாயிகள் போராட்டம் – ஹரியானா தேர்தல்களில் விவசாயிகளின் கோபத்தை எதிர்கொள்ளும் பாஜக
இந்நிலையில், நேற்று ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தின் கைம்லா கிராமத்தில் நடைபெறவிருந்த விவசாயிகளின் மகா பஞ்சாயத்து ஒன்றை பாஜக ஏற்பாடு செய்திருந்தது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. இந்தக் கூட்டம் வேளாண் சட்டங்களின் சாதகங்களை விளக்குவதற்காக என்று பாஜக கூறியிருந்தது.
கூட்டத்தில் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உரையாற்றவிருந்தார். அவரது ஹெலிகாப்டர் இறங்குவதற்காக, சிறப்பு ஹெலிகாப்டர் தளமும் அமைக்கப்பட்டிருந்தது. கர்னால் மனோகர் லால் கட்டாரின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி செல்லும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய ஹரியானா போலீஸ் – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை முடக்கப்பட்டது
விவசாய சட்டங்களை எதிர்த்து போராடும் பல விவசாயிகள் கைகளில் கம்புகளோடு கூட்டம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சென்றனர். அவர்களைத் தடுப்பதற்கு போலீஸ் அமைத்திருந்த பல அடுக்குத் தடுப்பரண்களை தகர்த்துச் சென்று கூட்டம் நடக்கும் இடத்தை அடைந்தனர் என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது.
விவசாயிகளை தடுப்பதற்காக போலீஸ் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது, நீர் பீரங்கிகளை பயன்படுத்தியது. ஆனால், விவசாயிகள் அவற்றை மீறி முன்னேறிச் சென்றிருக்கின்றனர்.
அவர்கள், அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளையும் மேடையையும் அடித்து நொறுக்கினர், போஸ்டர்களை கிழித்து எறிந்தனர்.
மேலும், முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளத்தையும் விவசாயிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து முதல்வரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். “விவசாயிகள் வன்முறை குணம் கொண்டவர்கள் இல்லை, விவசாயிகளைப் பயன்படுத்தி தமது சொந்த நலனுக்காக சில சக்திகள் இதைச் செய்திருக்கின்றனர்” என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஹரியானா முதல்வர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தடுக்கப்படுவது இது முதல்முறை அல்ல.
டிசம்பர் 9-ம் தேதி, கர்னாலில் உள்ள பாதா கிராமத்துக்கு செல்வதை, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளம் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ரத்து செய்தார்.
டிசம்பர் 22-ம் தேதி அம்பாலாவில் அவரது வாகன அணிவரிசை போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, மாநில அரசு கொலை முயற்சி வழக்கு போட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
மாநிலத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கூட்டணி ஜேஜேபி தலைவர்களும் தமது அலுவலகங்களுக்குள்ளும் வீடுகளுக்கும் மட்டுமே முடங்கியுள்ளனர். போராட்டம் தீவிரமாக நடைபெறும் கிராமங்களுக்குச் செல்லும் பாஜகவின் மூத்த தலைவர்கள் தாக்கப்படுவதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.