Aran Sei

ஹரியானா பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆதரிக்கும்படி வலியுறுத்தும் விவசாயிகள்

image credit : indianexpress.com

ரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும்படி அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களையும் கட்டாயப்படுத்துமாறு விவசாய சங்கத் தலைவர் குர்னாம் சிங் சாதுனி கூறியுள்ளார்.

தற்போது நடந்து வரும் ஹரியானா சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் கியான் சந்த் குப்தா ஏற்றுக் கொண்டுள்ளார். அது நாளை (மார்ச் 10) சட்டப் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.

ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும்படி வலியுறுத்தி பாஜக-ஜேஜேபி-சுயேச்சை உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெளியில் போராடுவதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். தீர்மானத்தை ஆதரிக்கா விட்டால் சட்டப் பேரவை உறுப்பினர்கள் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு மார்ச் 9-ம் தேதி முதல் மக்களை திரட்டும்படி பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் சதுனி அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே, மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள், அவற்றை ஆதரிக்கும் ஹரியானா அரசியல்வாதிகளை சமூக புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். பல கிராமங்களில் பாஜகவினருக்கு அனுமதி இல்லை என்று பதாகைகளை பொருத்தியுள்ளனர்.

“தனது தோல்விகளை மறைப்பதற்காக ஆளும் பாஜக-ஜேஜேபி அரசு உள்ளூர் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் 75% ஹரியானா இளைஞர்களுக்கு ஒதுக்கும் சட்டத்தை இயற்றி நடிக்கிறது. மாநில இளைஞர்களும் சரி, தொழிலதிபர்களும் சரி இந்த முடிவில் அதிருப்தி அடைந்துள்ளனர்.” என்று கூறியுள்ள ஹரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமாரி செலிஜா, “விவசாயிகளுக்கு ஆதரவான பாஜக-ஜேஜேபி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமது மனசாட்சிப்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும், விவசாய விரோத, தொழிலாளர் விரோத பாஜகவிலிருந்து விலக வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டப் பேரவையில் பேசிய, பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஜேஜேபியின் சட்டப் பேரவை உறுப்பினர் தோஹானா பப்லி தேவேந்தர், தங்களது சொந்த தொகுதிகளிலேயே ஒட்டு மொத்த கிராமங்களும் தங்களை புறக்கணிப்பது பிரச்சினையாக உள்ளது என்று பேசியுள்ளார். “கிராம மக்கள் அழைத்து தங்கள் கிராமத்துக்கு வர வேண்டாம் என்று சொல்கிறார்கள். நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். என்னை இது புண்படுத்துகிறது” என்று அவர் ஹரியானா சட்டப் பேரவையில் உரையாற்றும்போது கூறியுள்ளார்.

தோஹானா பப்லி தேவேந்தர், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு நெருக்கமானவர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

“விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் உட்கார்ந்திருக்கின்றனர். நமது தாய்மார்களும், பெரியவர்களும், மகள்களும் அங்கு அமர்ந்திருக்கின்றனர். ஏதோ சந்தோஷத்துக்காக அவர்கள் அங்கு உட்கார்ந்திருக்கவில்லை” என்று அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்