பிரதமர் மோடியின் கருத்துக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று கூறியுள்ள விவசாய சங்கங்கள், விவசாய விளைபொருட்களுக்கு முழு விலை வேண்டும் என்ற தமது கோரிக்கை பற்றி அரசு நேர்மையாக பரிசீலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
டெல்லியின் சிங்கு, காசிப்பூர், திக்ரி எல்லை பகுதிகளில் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
“பல சட்டங்கள் மக்களிடமிருந்து கோரிக்கை வராமலேயே நிறைவேற்றப்படுகின்றன என்ற மோடியின் கூற்று, விவசாயச் சட்டங்களை விவசாயிகள் கோரவில்லை என்பதை நிரூபிக்கிறது” என்று மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.
“கர்ஜா முக்தி, பூரா தாம்” (கடனிலிருந்து விடுதலை, முழு விலை) என்ற தமது நியாயமான, உண்மையான கோரிக்கை தொடர்பாக அரசு சீரியசாக இல்லை என்றும் அது கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.
முன்னதாக பஞ்சாபின் ஜக்ரோனில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. டெல்லியின் ஷம்பு எல்லையில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடத்தப்பட்டது.
இன்று, மொராதாபாத், பகதூர்கர் ஆகிய இடங்களிலும், அடுத்த வாரம் ராஜஸ்தானின் ஶ்ரீ கங்காநகர், ஹனுமான்கர், சிகார் ஆகிய இடங்களிலும் மகாபஞ்சாயத்துகள் நடக்கவுள்ளன என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
நாடு முழுவதும், விவசாயிகளின் மகா பஞ்சாயத்துக்கள் நடத்தப்படும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வது வரையிலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது வரையிலும் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று அது உறுதிபட கூறியுள்ளது.
மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், டெல்லியின் சிங்கு எல்லையில் நீண்ட போராட்டத்துக்கு தயாரிப்பாக இணைய இணைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர் என்று லைவ்மின்ட் செய்தி தெரிவிக்கிறது.
அரசின் இணைய இணைப்பு தடையை மீறி தகவல் தொடர்பை பராமரிக்க தனி கண்ணாடி இழை தொடர்பை ஏற்படுத்துவது, பாதுகாப்புக்கான இளைஞர் குழுவை ஏற்படுத்துவது, கண்காணிப்புக்கான காமிராக்களை பொருத்துவது ஆகிய நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வரவிருக்கும் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு, சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பிரதான மேடையில் மின் விசிறிகளும், குளிர்பதன வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று லைவ்மின்ட் தெரிவிக்கிறது.
“நாங்கள் லங்கர் (சமுதாய சமையற்கூடம்) என்ற கலாச்சாரத்திலிருந்து வருபவர்கள். எனவே, உணவுக்கு பிரச்சினை இல்லை. போராட்டம் தொடர்கிறது, கலந்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கைக்குக் குறை இல்லை” என்று பஞ்சாபைச் சேர்ந்த மோகாவிலிருந்து வந்துள்ள ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் காசிப்பூர் எல்லையில் போராட்டத்துக்கு தலைமை தாங்கி வரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திகாயத், விவசாயிகள் போராட்டம் நீண்ட காலத்துக்குத் தொடரும் என்றும், இனி வரும் நாட்களில் அது நாடு முழுவதும் பரவும்” என்று கூறியுள்ளதாக லைவ் மின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.