Aran Sei

” விவசாயிகள் போராட்டத்தில் சீனா, பாகிஸ்தான் தூண்டுதல் என்று சொல்வதா! ” – பாஜக அமைச்சருக்கு கண்டனம்

ஒன்றிய அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே - Image Credit : ndtv.com

ன்றிய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே, நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் பாகிஸ்தான், மற்றும் சீனாவால் தூண்டி விடப்படுகிறது என்று கூறியிருப்பதை டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி வன்மையாக கண்டித்துள்ளது.

“விவசாயிகள் அமைதியாக போராடுகின்றனர், அரசு அவர்களுக்கு நியாயம் வழங்க தவறியுள்ளது. விவசாயிகள் நாட்டுக்காக போராடி உயிர் விடுகின்றனர், உணவு உற்பத்தி செய்கின்றனர், அவர்களது குழந்தைகளும் நாட்டுக்காக தியாகம் புரிகின்றனர். அவர்கள் தேச விரோதிகள் என்று சித்தரிக்க முயற்சிக்காதீர்கள்” என்று டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி தலைவர் எஸ் மணிந்தர் சிங் சிர்சா புதன் கிழமை வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் விவசாயிகளையும் நாட்டையும் அவமானப்படுத்துபவை என்று சித்தரித்த அவர், அரசின் அமைச்சர்களும் செய்தித் தொடர்பாளர்களும் தொடர்ந்து இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் என்று அவர் கூறியதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்

செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் போராடி வருகின்றனர். அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகும் உடன்பாடு ஏற்படவில்லை. மூன்று விவசாய சட்டங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

விவசாயிகள் மீது அவதூறு – கங்கனா ராணாவத்தின் வாயை மூட வைத்த தில்ஜீத் – வீடியோ

இந்தப் போராட்டம் பற்றி மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே, “இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் விவசாயிகளின் போராட்டமே இல்லை. சீனாவும் பாகிஸ்தானும் இதைத் தூண்டி விடுகின்றன. நாட்டின் முஸ்லீம்கள் முதலில் தூண்டி விடப்பட்டனர். அவர்களிடம் என்ன சொல்லப்பட்டது? என்ஆர்சி வருகிறது, சிஏஏ வருகிறது. முஸ்லீம்கள் ஆறு மாதங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வரும் என்று சொல்லப்பட்டது. ஒரு முஸ்லீமாவது வெளியேறியிருக்கிறாரா” என்று கூறியிருந்தார்.

அத்தகைய முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்று கூறிய அவர், இப்போது விவசாயிகள் நஷ்டத்தை எதிர்கொள்வார்கள் என்று பயமுறுத்தப்படுகிறார்கள். “இது பிற நாடுகளின் சதித்திட்டம்” என்று அவர் சொன்னதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

விவசாயிகள் போராட்டம்: அமித் மால்வியாவின் ஆதாரமற்ற அவதூறுகள்

சில நாட்களுக்கு முன்பு ஹரியானா விவசாயத் துறை அமைச்சர் ஜே பி தலால், விவசாய போராட்டம் பாகிஸ்தானாலும் சீனாவாலும் தூண்டி விடப்படுகிறது என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ராவ்சாஹேப் தன்வேயின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய ஆம் ஆத்மி கட்சி, “பாஜக போராட்டத்தை அயல்கிரகத்தினரின் படையெடுப்பு என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று ட்வீட் செய்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்