Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி

credits : the newindian express

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதில் இருந்து பஞ்சாபில் விவசாயிகள் அச்சட்டங்களுக்கு எதிர்ப்புத்  தெரிவித்தும் அதனை பின்வாங்குவதற்கு அழுத்தம் கொடுத்தும் போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (வளர்த்தல் மற்றும் வசதி செய்தல்) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் & பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாயச் சேவைகள் மீதான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதி்ரப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த தசரா பண்டிகையின் போது பஞ்சாப் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்ட பாரதிய கிசான் யூனியனைச் (இந்திய விவசாயிகள் சங்கம்) சேர்ந்த பலரும் பிரதமர் நரேந்திர மோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வ தேசிய நிறுவனங்களின் உருவ பொம்மைகளை எரித்து வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன. இந்தப் போராட்டங்களில் இதுவரை 12 விவசாயிகள் இறந்துள்ளதாக the wire இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இந்தப் பன்னிரண்டு பேரில் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாகவும் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சிக்கி இறந்ததாகவும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் சிலர் மாரடைப்பால் இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. போராட்டங்களில் இறந்தவர்களுக்கு இழப்பீடாக பஞ்சாப் அரசு மூன்று லட்சம் வழங்கியுள்ளது.

போராட்டத்தில் இறந்தவர்கள் :

யஸ்பால் சிங் (60).

லப் சிங் (65)

ஜக்ராஜ் சிங் (57)

மேக் ராஜ் பவா (70)

கேப்டன் தில்பர் ஹுசய்ன் (69)

ஹர்பன்ஸ் சிங் (62)

ஜொகிந்தர் சிங் (54)

தேஜ் கவுர் (82)

குர்பீத் சிங் ராங்கி (33)

வாசிர் சிங் (70)

பிரித்தம் சிங் (65)

முக்தாயிர் சிங் (62) ஆகியோர் ஆகும். இந்த மரணங்கள் விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்தவில்லை. அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நவம்பர் 5-ம் தேதியன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்திய அளவிலான சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளன.

மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை நடத்திவரும் சுமார் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து குறுக்கு வழியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றப்படவிருக்கும் மின்சாரத் திருத்த மசோதா 2020-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்