Aran Sei

விவசாயிகள் போராட்டம் – சட்ட நகல்கள் எரிப்பு, “டெல்லி சலோ” பேரணி, பெண்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Image Credit : thehindu.com

விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி 13-ம் தேதி, பஞ்சாப் உழவர் பண்டிகையான லோஹ்ரி அன்று, அச்சட்டங்களின் நகலை எரிக்கப் போவதாக போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

டெல்லி எல்லையில் உள்ள சிங்குவில் போராட்டக் களத்தில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட அமரிந்தர் சிங்கின் தியாகம் வீண் போகாது என்று விவசாயிகள் சூளுரைத்துள்ளனர் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.. அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத காரணத்தால், தான் இந்த நடவடிக்கை எடுக்கும்படி தள்ளப்பட்டுள்ளதாக இறக்கும் முன் அமரிந்தர் சிங், இறக்கும் முன்பு தனது நண்பர்களிடம் கூறினார்.

லூதியானாவில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இருந்து 3 நாட்களாக நடந்து போராட்டக் களத்தை அடைந்துள்ளார், சுக்விந்தர் சிங். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்த பிறகு, தன்னுடைய அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து விட்டு போராட்டக் களத்துக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“எனது 3 நாள் பயணத்தின் போது, வழியில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த ஏராளமான விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் நான் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 18-ம் தேதி, பெண் விவசாயிகள் தினத்தில், வட்ட மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும், மாநகர மட்டத்திலும் , போராட்டக் களத்திலும் பெண்களின் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று விவசாயத் தலைவர்கள் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இது விவசாயத் துறையில் பெண்களின் பங்களிப்பை குறிப்பதாக அமையும்.

ஜனவரி 20-ம் தேதி, குரு கோபிந்த் சிங்-ன் பிரகாஷ் பர்வ் தினத்தன்று, “போராட்டத்தை வெற்றியடையச்” செய்வதற்கான உறுதிமொழியை விவசாயிகள் மேற்கொள்வார்கள்.

நவநிர்மாண் கிசான் சங்கதன் என்ற விவசாய சங்கம், ஜனவரி 15-க்கும் ஜனவரி 21-க்கும் இடையே “டெல்லி சலோ” என்ற முழக்கத்துடன், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து டெல்லியை நோக்கிச் செல்லப் போவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, நூற்றுக் கணக்கான விவசாயிகள் ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஷாஜஹான்பூருக்குச் சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்