Aran Sei

விவசாயிகள் போராட்டம்: அமித் மால்வியாவின் ஆதாரமற்ற அவதூறுகள்

Image Credits: Telegraph India

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு மாவோயிஸ்ட் மற்றும் காலிஸ்தான் (சீக்கிய பிரிவினைவாத இயக்கம்) இயக்கத் தொடர்புகள் இருப்பதாகப் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், அவர் தனது கருத்தை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

தேசிய தலைநகரில் வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது தொடர்பான நோட்டீசின் படத்தை அமித் மால்வியா பகிர்ந்துள்ளார். அத்துடன், டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “டெல்லியை எரிக்கும் வாய்ப்புக்காக” காத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சி, “அமித் மால்வியா பதிவிட்டுள்ள நோட்டீஸில் விவசாயிகள் தங்கள் பயிர்களை மண்டிக்கு வெளியே (மொத்த விலை சந்தை) எங்கும் விற்க அனுமதிக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பல ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில் இருந்த நெறிமுறைகள் தளர்த்தப்பட்டன” என்று ஆம் ஆத்மி கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “இப்போது தானியங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நாங்கள் மண்டிகளை அகற்றவில்லை, அங்கும் விற்பனைகள் தொடர்கின்றன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் இதை ஆம் ஆத்மி கட்சி ஆதரிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குருநானக் ஜெயந்தி தினத்தன்று (நவம்பர் 30-ம் தேதி) அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், போராடிவரும் விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு டெல்லி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமித் மால்வியா, விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்களின் பங்களிப்பு உள்ளது என்று கூறியுள்ள இரண்டாவது முக்கிய பாஜக தலைவர்.

மேற்கு வங்கத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் அமித் மால்வியா

சனிக்கிழமை, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “‘இந்திரா காந்திக்கு இதைச் செய்திருக்கிறோம், மோடிக்கு இதை ஏன் செய்ய முடியாது?’ என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியுள்ளதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளது” என மனோகர் லால் தெரிவித்துள்ளார்.

“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் எந்த அரசியல் சார்பு நிலையையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்